யாழில் வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்
வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டமானது இன்று(19.10.2026) யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது பொலிஸார் குவிக்கப்பட்டு மாவட்ட செயலக பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
பாரிய அதிருப்தி
போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் கருத்து தெரிவித்த போது, நடைபெற்று முடிந்த பரீட்சை தொடர்பிலும் அதனை அடுத்து வெளியிடப்பட்ட நேர்முகத்தேர்வு பெயர் விபரங்கள் தொடர்பிலும் வேலையற்ற பட்டதாரிகளின் அடிப்படை உரிமைகள் முழுவதுமாக மீறப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த பட்டியல் எத்தகைய அடிப்படையில் வெளியிடப்பட்டது என்பதை வைத்து நாம் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளோம் என்பது புலனாகிறது.

குறிப்பாக அரசேவையில் உள்ள பட்டதாரிகள் பெருவாரியாக பாடவாரியாகவும் மாகாண வாரியாகவும் அதிகமாக உள்ளீர்க்கப்பட்டிருப்பது எம்மை முழுவதுமாக ஏமாற்றும் செயற்பாடாக அமைவதுடன் அது அனைத்து வேலையற்ற பட்டதாரிகள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.எனவே இது தொடர்பாக நீதி கேட்பது எமது கடமையாகும்.
எனவே குறித்த பரீட்சை புள்ளிகளின் நியாயமான முறையையும் அத்தோடு அரச சேவை பட்டதாரிகள் மற்றும் வேலையற்ற பட்டதாரிகள் சரிசமமாக அதாவது 50க்கு 50 என்ற விகிதத்தில் உள்ளீர்க்கப்பட வேண்டும் என்பதையும் இது தொடர்பான நியாயமான சட்டவலுவிற்குட்பட்டு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வடமாகாணம் தழுவிய வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் முனைந்து வருகிறது. இந்நிலையில் குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாக தெரிவித்தனர்.




