பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு கம்மன்பில விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கையின் போலீஸ் ஊடகப் பேச்சாளருக்கு முன்னாள் அமைச்சர் மற்றும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதயகம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸார் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டால் தண்டனை விதிப்பதாக அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
இதன் மூலம் பொலிஸார் அனுமதிப்பத்திரம் பெற்ற சண்டியர்களாக மாறியுள்ளனர் என குற்றம் சுமத்தியுள்ளார். நள்ளிரவில் பேய்கள் மரமேறும் நேரத்தில் வந்து இவ்வாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் கருத்து வெளியிட்டிருந்தார் என தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு கொலை அல்லது கொள்ளை அல்லது ஏதேனும் ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டவர் ஒரு நாளும் தான் தாக்கியதாக கூறமாட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தாக்குதல் நடத்தியவர் எமது பௌத்த தேரர்களை தாக்கிய தரப்பினார் இது தொடர்பில் யாரும் பேசக்கூடாது என அச்சுறுத்தல் விடுக்கும் உரிமை அவர்களுக்கு கிடையாது என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அச்சுறுத்தல்கள் அரசியல் அமைப்பின் பிரகாரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்தை முடக்கும் செயற்பாடாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸலார் தாக்குதல் நடத்தவில்லை என கூறினாலும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தேரரை தாக்கியதாகவும் அவரை தள்ளி விட்டதாகவும் அங்கிருந்தவர்கள் சாட்சியம் அளித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பொய் அரசாங்கமும் பொய் பொலிஸாரும் நாட்டுக்கு தொடர்ந்து பொய்யுரைத்து வருவதாகவும் தொடர்ந்தும் மக்களை பிழையாக வழிநடத்தக் கூடாது என பொலிஸ் ஊடக பேச்சாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றோம் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.