மாலைதீவில் இலங்கைக்கு சொந்தமான இரு படகுகள் கைப்பற்றல்:பாதுகாப்பு தரப்பு அறிவிப்பு
மாலைதீவின் கடல் எல்லைக்குள் நுழைந்ததாக இரு இலங்கை மீன்பிடி படகுகளை மாலைதீவு தேசிய கடலோர பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (1.01.2026) பிற்பகல் 2:02 மணியளவில் மாலைதீவு தேசிய கடலோர காவல்படை மற்றும் விமானப்படை நடத்திய கண்காணிப்பு நடவடிக்கையின் போது இந்தப் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மாலைதீவு கடல் எல்லையை தாண்டிய படகுகள்
மாலைதீவு தேசிய கடலோர காவல்படையினரின் கூற்றுப்படி, வடக்கு மாலைதீவில் உள்ள அலிஃப் கேலாவிலிருந்து சுமார் 109 கடல் மைல் தொலைவில் இந்த மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த இரண்டு படகுகளும் மேலதிக விசாரணைக்காக குல்ஹுதுஃபுஷி துறைமுகத்தில் உள்ள பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மாலைதீவின் பிரத்தியேக பொருளாதார வலையத்திற்குள் நுழையும் இலங்கை மீன்பிடி படகுகள் கடல் எல்லைகளை மீறியதற்காக அவ்வப்போது மாலைதீவு அதிகாரிகளால் கைப்பற்றப்படுவது வழமையாகும்.
சில படகுகள் போதைப் பொருட்களை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த இரு மீன்பிடி படகுகள் தொடர்பில் மேலதிக விபரங்கள் எதுவும் மலைதீவு அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.