இலங்கையில் இரண்டு இலட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம்! வெளியான தகவல்
மின் கட்டண உயர்வினால் பல நிறுவனங்களை நடத்த முடியாமல், ஏறக்குறைய சுமார் இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, தொழிலாளர் சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மின் கட்டண அதிகரிப்பால் சமாளிக்க முடியாதளவில் கடும் நஷ்டம் ஏற்படுவதால் பல நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கோவிட்தொற்று பரவலினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், சுமார் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில் வல்லுநர்கள் தொழில் வாய்ப்புக்களை இழந்து வீதிக்கு இறங்கிய நிலையில்,தற்போதும் அவ்வாறான நிலையேற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி
குறிப்பாக சுற்றுலாத்துறை உணவகங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் மூடப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்கும் பிரதான இடங்களாகும் என இலங்கை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் உப தலைவர் பிரியந்த திலகரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் ஏற்கனவே ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், விருந்தினர் மாளிகைகள் உள்ளிட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா விடுதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும் குறைக்கவும் ஏற்கனவே பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
வாழ்க்கை செலவு அதிகரிப்பு
இதேவேளை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக அதிகளவான தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்குச் செல்லும் போக்கு காணப்படுவதாகவும், 2020ஆம் ஆண்டில் மாத்திரம் 53,711 தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றுள்ளதாகவும் தொழிலாளர் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2021 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து இருபதாயிரத்து எழுநூற்று தொண்ணூற்று ஐந்தாக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.