ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களில் இருந்து விலகும் அமெரிக்கா.. ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு எதிராக செயல்படுகின்றன எனக் கருதப்படும் 66 சர்வதேச மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலக திட்டமிட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இவற்றில் காலநிலை மாற்றம், அமைதி மற்றும் ஜனநாயகம் தொடர்பான முக்கிய சர்வதேச ஒத்துழைப்பு மேடைகளும் அடங்குகின்றன.
இது தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறவிப்பில், அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக உள்ள அமைப்புகள், ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள் எவை என்பதை ஆய்வு செய்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நிதிகள் துண்டிப்பு..
மேலும், இந்த தீர்மானங்களின் மூலம், தொடர்புடைய அமைப்புகளில் அமெரிக்கா தனது பங்கேற்பை முழுமையாக நிறுத்துவதுடன், அவற்றிற்கு வழங்கப்படும் அனைத்து நிதியுதவிகளையும் துண்டிக்க உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த அதிரடி தீர்மானம் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட பட்டியலில், 35 ஐக்கிய நாடுகள் அல்லாத அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.
இதில் குறிப்பாக காலநிலை மாற்றம் குறித்த அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் சர்வதேச காலநிலை மாற்றக் குழு (IPCC), ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவி தொடர்பான சர்வதேச நிறுவனம் (International Institute for Democracy and Electoral Assistance), மேலும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (International Union for Conservation of Nature) ஆகியவை குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.
வெள்ளை மாளிகை வெளியிட்ட பட்டியலில் காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான அமைப்பு (IPCC), ஐ.நா. அல்லாத அமைப்பாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், அது உண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு பகுதியாகும்.
ஏற்படவுள்ள சிக்கல்..
உலகின் முன்னணி விஞ்ஞானிகளை ஒருங்கிணைத்து, காலநிலை மாற்றம் தொடர்பான ஆதாரங்களை மதிப்பாய்வு செய்து, அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்டும் வகையில் காலந்தோறும் அறிவியல் மதிப்பீட்டு அறிக்கைகளை வழங்கும் அமைப்பாக IPCC செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையில், 31 ஐக்கிய நாடுகள் அமைப்புகளிலிருந்தும் அமெரிக்கா விலக உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதில் முக்கியமான காலநிலை ஒப்பந்த அமைப்பான ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றக் கட்டமைப்பு ஒப்பந்தம் (UNFCCC), ஐ.நா. ஜனநாயக நிதியம் (UN Democracy Fund), மேலும் தாய் மற்றும் குழந்தை நலன் தொடர்பாக முக்கியமாக செயல்படும் ஐ.நா. மக்கள்தொகை நிதியம் (UNFPA) ஆகியவை அடங்குகின்றன.
மேலும், போர் நிலைகளில் வன்முறைக்கு உள்ளாகும் ஆபத்தான குழுக்களை பாதுகாக்கும் நோக்கில் செயல்படும் பல ஐ.நா. அமைப்புகளும் இந்த முடிவால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதில், ஆயுத மோதல்களில் குழந்தைகளின் பாதுகாப்புக்காக செயல்படும் பொதுச்செயலாளர் சிறப்பு பிரதிநிதி அலுவலகம் (UN Office of the Special Representative of the Secretary-General for Children in Armed Conflict) குறிப்பிடத்தக்கதாக உள்ளது.