தகாத செயல் குற்றச்சாட்டுக்காக 5.6 மில்லியன் டொலர் இழப்பீடு செலுத்திய டிரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், எழுத்தாளர் ஈ. ஜீன் கரோலுக்கு (E Jean Carroll) பாலியல் அத்துமீறல் மற்றும் அவதூறு வழக்கில் நீதிமன்றம் விதித்த 5.62 மில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையை வழங்கியுள்ளார்.
இதனை ஜீன் கரோலின் வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முன்னாள் பத்திரிகை பத்தியாளரான 82 வயது ஜீன் கரோல், 1990-களின் மத்தியில் மன்ஹாட்டனில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் ஆடை மாற்றும் அறையில் டொனால்ட் டிரம்ப் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டினார்.

மேலும், 2022-ஆம் ஆண்டில் தனது 'ட்ரூத் சோஷியல்' இணையதளப் பதிவின் மூலம் டிரம்ப் இந்தத் குற்றச்சாட்டுகளை மறுத்து, தன் மீது அவதூறு பரப்பியதாகவும் உரிமையியல் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்ற ஜூரிகள் குழு, 2023-இல் டிரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பளித்து, கரோலுக்கு 5 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்ததால், இழப்பீட்டுத் தொகை நீதிமன்றக் கட்டுப்பாட்டில் உள்ள கணக்கில் வைக்கப்பட்டிருந்தது. டிரம்ப் இந்தத் தொகையை வழங்குவதைத் தாமதப்படுத்த முயன்று, உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
ஆனால், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கரோலுக்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்குமாறு டிரம்பிற்கு அதிரடி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, அசல் இழப்பீட்டுத் தொகையான 5 மில்லியன் டாலர் மற்றும் மேல்முறையீட்டுக் காலத்தில் சேர்ந்த வட்டி ஆகியவற்றுடன் சேர்த்து மொத்தம் 5.62 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை ஜீன் கரோலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பணம் தமக்குக் கிடைத்ததை உறுதி செய்த ஜீன் கரோல், தனது வலைப்பதிவில், "நாங்கள் வென்றுவிட்டோம்! இந்த வெற்றி உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்குமானது!" என கரோல் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
டிரம்பின் வழக்கறிஞர்கள் இந்தத் தீர்ப்பைக் கடுமையாகச் சாடியுள்ளனர். இந்த வழக்கு ஜனநாயகக் கட்சியினரால் நிதியுதவி அளிக்கப்பட்ட ஒரு "திட்டமிட்ட சதி" மற்றும் "பழிவாங்கும் நடவடிக்கை" என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், இந்த வழக்கின் நீதிபதி லூயிஸ் கப்லான் நடுவர் குழுவை டிரம்பிற்கு எதிராகத் திசைதிருப்பும் சாட்சியங்களை முறையற்று அனுமதித்தார் என டிரம்ப் தரப்பு வாதிட்டது. எனினும், மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் டிரம்பின் கோரிக்கைகளை நிராகரித்துவிட்டன.