ஈஸ்டர் தாக்குதலின் உண்மை சூத்திரதாரிகள் கண்டறியப்பட வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு, அதன் பின்னணியில் இருந்த அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்(20.06.2026) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுரேஷ் சலேவிடம் நடத்தப்படும் விசாரணை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் இராணுவ புலனாய்வுத் துறைத் தலைவரும் தற்போது விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவருமான சுரேஷ் சலே தொடர்பாக பல்வேறு அரசியல் தரப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.
சுரேஷ் சலே நீண்டகால உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அவரை விடுதலை செய்ய வேண்டும் என சில அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக் குழுவுடன் அவர் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவரிடமிருந்த கணினித் தகவல்களைப் பெற முடியாமல் இருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், உண்மைகளை வெளிக்கொணர அனைத்து ஆதாரங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.
மேலும், கடந்த காலங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பல தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் சிறையில் வைக்கப்பட்ட சம்பவங்களிலும் புலனாய்வுத் துறையின் பங்கு காணப்படுகிறது.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் என்பது மத வழிபாட்டுத் தலங்களையும், பொதுமக்கள் தங்கியிருந்த ஹோட்டல்களையும் இலக்காகக் கொண்ட கொடூரமான பயங்கரவாதச் செயல்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணி
இந்த தாக்குதலின் முழுமையான பின்னணி வெளிச்சத்துக்கு வர வேண்டியது அவசியம்.
வெறுமனே தாக்குதலை மேற்கொண்டவர்களை அடையாளம் காண்பது மட்டுமல்லாது, அதன் பின்னணியில் அரசியல் அல்லது வேறு அமைப்புசார்ந்த தொடர்புகள் இருந்தனவா என்பதையும் விசாரணைகள் தெளிவுபடுத்த வேண்டும்.
சுரேஷ் சலே மட்டுமல்லாது, அவருக்கு பின்னால் செயல்பட்டவர்கள் யார், இந்த தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதும் கண்டறியப்பட வேண்டும்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நாட்டின் எதிர்காலத்திற்கும் ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்கும் முக்கியமானவை.
இந்த விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடனும் உறுதியுடனும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்த தாக்குதலின் உண்மையான காரணங்கள் மற்றும் பின்னணிகள் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதுடன், எதிர்காலத்தில் இத்தகைய துயர சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான வழிமுறைகளும் வலுப்பெறும் என தெரிவித்துள்ளார்.