இந்தியன் எண்ணெய் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படவுள்ள திருகோணமலை எண்ணெய் தாங்கி : உதய கம்மன்பில
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு பெரும்பான்மை பங்குகளுடன் லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனத்துடன் உருவாக்கப்படவுள்ள ஒரு நிறுவனத்தின் கீழ் திருகோணமலை எண்ணெய் தாங்கிப்பண்ணை நிர்வகிக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மறுவார்த்தையில் கூறுவதானால், இது பெற்றோலியக்கூட்டுத்தாபனத்துக்கு பெரும்பான்மை பங்குகளைக் கொண்ட நிறுவனமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது இலங்கையின் கணக்காய்வாளர் நாயகத்தின் ஆய்வுக்கு உட்பட்டது.
அத்துடன் பொது நிறுவனங்களுக்கான குழு (கோப்) இதன் அறிக்கைகளை ஆராயலாம். இந்தநிலையில் இந்தியாவுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அத்தகைய பங்கு பகிர்வு ஏற்பாட்டிற்கான உடன்பாட்டை எட்ட முடியும் என்று உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின்போது 99 எண்ணெய் தாங்கிகள் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொன்றிலும் 10,000 தொன் எரிபொருளை சேமிக்க முடியும். அதாவது இலங்கைக்கான இரண்டு மாத பாவனை எரிபொருளை சேமிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
மறைந்த சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் இந்த தொட்டிகளை பிரித்தானிய ஆட்சியில் இருந்து கையகப்படுத்தியது. எனினும் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் அவற்றை ஒரு தொட்டிக்கு 1000 அமெரிக்க டொலர் வருடாந்த வாடகையில் 35 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு வழங்கியது, இப்போது, குத்தகைக் காலத்தின் 18 ஆண்டுகள் கடந்துவிட்டன.
இந்தநிலையில் எரிபொருள் தாங்கிப் பண்ணையை நிர்வகிப்பதற்கான காலக்கெடு குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.



