திருகோணமலையில் உயிரிழந்த தாய்! உடல் பாகங்களை தானம் செய்ய அனுமதித்த பிள்ளைகளின் நெகிழ்ச்சி செயல் (VIDEO)
திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தாய் ஒருவரின் உடல் பாகங்களை தானம் செய்ய பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் முன்வந்துள்ளனர்.
இந் நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து விசேட வைத்திய குழுவொன்று ஹெலிகொப்டர் மூலம் இன்று (04) விஜயம் செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நிலாவெளி- ஆறாம் கட்டை இரண்டாவது ஒழுங்கையில் வசித்து வந்த டி.சசிரேகா (41வயது) தனியார் கம்பெனியொன்றில் சுத்திகரிப்பு தொழிலாளியாக கடமையாற்றி வந்துள்ள நிலை அதிக இரத்த அழுத்தத்தினால், நரம்பு வெடிப்பு ஏற்பட்டு அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண்ணிற்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அவரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குடும்பத்தினருக்கு வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் உடலில் அனைத்து பாகங்களும் ஒழுங்காக செயற்பட்டு வருவதாகவும் தலையிலுள்ள நரம்பில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் குறித்த பெண்ணின் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் பெண்ணின் உடற் பாகங்களான சிறுநீரகம் மற்றும் இதயம் போன்றவற்றை தானம் செய்வதற்கு முன்வந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலை நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியுள்ளனர்.
இதன்போது பிள்ளைகள் மற்றும் உறவினர்களின் அனுமதியுடன் இரண்டு சிறுநீரகங்களுடன் , இருதயம் ஆகியவை பெறப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்திய குழுவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் கடமையாற்றி வந்த தனியார் கம்பெனியின் மேற்பார்வையாளர் தேவையற்ற விதத்தில் தேவையற்ற வசனங்களை பாவித்து ஊழியர்களுக்கு ஏசுவதாகவும், சுகயீனம் என கூறினாலும் விடுமுறை வழங்காமல் வேலைக்கு அமர்த்துவதாகவும் இதனாலேயே இந்த பெண்ணுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டதாகவும் சக ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பெண்ணின் உடற் பாகங்கள் தானம் செய்யப்படுவது வரவேற்கத்தக்கது.
தனது தாயை காப்பாற்ற இயலாது போனாலும் இவருடைய உடற் பாகங்களை கொண்டு ஜீவிக்கும் எவராவது நன்மை பெறுவார்கள். அவர்கள் செய்யும் நல்ல காரியங்கள் தனது தாயை வந்தடையும் எனவும் பெண்ணின் பிள்ளைகள் குறிப்பிட்டுள்ளனர்.



