திருகோணமலையில் இளம் தாயொருவர் பரிதாபமாக பலி! பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
திருகோணமலை பொது வைத்தியசாலையில் இரைப்பையழற்சி (கேஸ்டிக்) காரணமாக அனுமதிக்கப்பட்ட இளம் தாயொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒன்பதாம் திகதி கேஸ்டிக் மற்றும் குளிர் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை - தெவனிபியவர பகுதியைச் சேர்ந்த ஐந்து மாத கைக்குழந்தையின் தாயாரான குணசிங்க முடியன்சலாகே ஹன்சிகா பியூமாலி சமரசேன (23 வயது) எனவும் தெரியவருகின்றது.
பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
குறித்த இளம் தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 15 ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு கடமையில் இருந்த பெண் ஊழியர் ஒருவர் தாதியரிடம் பெண் மயக்கமுற்ற நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், கடமை நேர வைத்தியர்களுக்கு தெரியப்படுத்தவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பெண்ணின் பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு பின்னர் சதையில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கடந்த சில மாதங்களாக திருகோணமலை பொது வைத்தியசாலையில்
மரணங்களின் வீதம் அதிகரித்து வருவதாகவும், அதிகளவிலான முறைப்பாடுகள் நோயாளர்களை
கவனிக்காமையே காரணம் எனவும் வைத்தியசாலையின் உயர் அதிகாரி ஒருவர்
குறிப்பிட்டுள்ளார்.
