யான் ஓயா திட்டத்தை விரிவுபடுத்துமாறு கோரிக்கை
யான் ஓயாவில் நிரந்தரமான ஓர் அணைக்கட்டை அமைப்பதன் மூலம் அண்ணளவாக 500 ஏக்கர் நிலத்தில் நெற்செய்கை மேற்கொள்ளலாம் என்பதோடு நாட்டின் அரிசி உற்பத்தியினையும் அதிகரிக்கலாம் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
குச்சவெளியில் நேற்று (18) இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், கூறுகையில், "யான் ஓயா திட்டத்தின் கீழ் அடங்கும் நான்கு குளங்களில் இருந்து வரும் கழிவு நீரானது புலிகுத்தி ஆறின் ஊடாக ஓடிக்கடலில் வீணாக கலக்கின்றது.
மண் சாக்கு அணை
மாகாண நீர்ப்பாசனத் திணைக்களமானது கடந்த ஆண்டு இந்த ஆற்றுக்கு குறுக்கே தற்காலிகமாக மண் சாக்கு அணைகட்டி 300 ஏக்கரில் விவசாயம் செய்ய நீர் வழங்கியது. இந்த திட்டத்தினை செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்தும் அங்கு தெரிவிக்கையில் பதவியாவில் உள்ள ஜெயந்திவெவ குளத்தில் இருந்து வரும் கழிவு நீரானது வண்ணான்துறை ஆறு, குண்டாறு ஆகியவற்றின் ஊடாக ஓடி கடலில் வீணாகக் கலக்கின்றது.
வண்ணான்துறை ஆற்றின் குறுக்கே ஓர் அணைக்கட்டு உள்ளது. இதனை மறுசீரமைத்தால் தென்னமரவடி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 300 ஏக்கர் நெற்செய்கைக்கு நீர் வழங்கலாம்.
இதன் மூலம் அரிசி உற்பத்தியினைப் பெருக்கலாம். குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் நீலபணிக்கன் குளமானது திரியாய் வட்டாரத்தில் வதியும் மக்களுக்கு உரித்தாக உள்ளது.
எனினும் மேற்படி குளத்தில் மீன் பிடிக்கும் உரிமை திரியாய் நன்னீர் மீன்பிடிச் சங்கத்திற்கு வழங்காமல் வேறோர் ஊரில் உள்ள சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மீன்பிடி உரிமை திரியாய் நன்னீர் மீன்பிடிச் சங்கத்திற்கு வழங்க வேண்டும். 2025 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் கிராமிய வீதி வேலைத்திட்டம், PSDG வேலைத்திட்டம் என்பவற்றின் கீழ் குச்சவெளி பிரதேச சபைப் பிரிவில் 12 கிலோமீட்டர் வீதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கு நன்றி. எனினும் குச்சவெளி பிரதேச சபை பிரிவில் மற்ற எல்லா வட்டாரங்களில் இருந்தும் வீதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ள போதும் திரியாய் வட்டாரத்தில் இருந்து ஒரு வீதியும் தெரிவு செய்யப்படவில்லை. திரியாய் பாடசாலையில் தொடங்கி புல்மோட்டை வீதியில் இணையும் கோவில் வீதியும் நீலப்பணிக்கன் குளத்திற்குச் செல்லும் வீதியும் குன்றும் குழியுமாகக் காணப் படுகின்றன.
இவற்றை மறுசீரமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் . திருகோணமலையில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் பேருந்துகள் முன்னர் கல்லம்பற்றை ,தென்னமரவடி கிராமங்கள் ஊடாக சென்று வந்தன. இப்பொழுது அவை அவ்வாறு செல்வதில்லை.
பேருந்து சேவைகள்
இதனால் அவ்வூர்களில் வாழும் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகின்றனர். எனவே இந்தப் பேருந்துச் சேவைகளை மீள இயக்க வேண்டும் எனவும் நிலாவெளி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள மாரியம்மன் வீதியானது 02 கிலோமீட்டர் நீளமானது. இதில் 01 கிலோமீட்டர் வீதி மாத்திரமே நீண்ட காலத்திற்கு முன்பு மறுசீரமைக்கப் பட்டுள்ளது.
எஞ்சிய 01 கிலோமீட்டர் வீதியினை மறுசீரமைக்க வேண்டும். கோணேசபுரி தொடக்கம் இறக்கக்கண்டி வரை உள்ள கடற்பகுதியில் அனுமதி பெறாத படகு உரிமையாளர்கள் சுற்றுலா பயணிகளை கூட்டிச் சென்று கடல்வாழ் உயிரினங்கள் ஆன சுறா, திமிங்கிலம் ஆகியவற்றுக்கு தீங்கு செய்வதோடு காயத்தையும் விளைவிக்கின்றனர்.
இதனை தடுத்து நிறுத்த ஆவன செய்ய வேண்டும். கும்புறுப்புட்டி வட்டாரத்தில் அடங்கும் சலப்பையாறு கிராம மக்கள் யானைத் தொல்லையினால் மிகவும் இன்னல் படுகின்றனர்.
இக்கிராமத்திற்கு யானை வராமல் தடுக்க யானை வேலி அமைக்க வேண்டும். சலப்பையாற்றுக் கிராமத்தில் உள்ள இளையோர் பொழுது போக்கு வசதியின்மையால் வேறு திசைகளில் செல்லக்கூடிய சூழல் காணப்படுகின்றது. இதனை தவிர்க்கும் பொருட்டாக அவர்களுக்கு ஒரு விளையாட்டு அரங்கினை அமைக்க இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும்.
பண்டவாச்சி விவசாய வீதியானது அண்ணளவாக 150 விவசாயிகள் பயன்படுத்தும் 03 கிலோமீட்டர் நீளமான வீதியாகும். இது கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக செப்பனிடாமல் உள்ளது. இதனை விரைவாக மறுசீரமைக்க வேண்டும் என மேலும் தனது பிரேரனைகளை முன்வைத்து உரையாற்றினார்.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
