முச்சக்கரவண்டி சாரதிகளால் எரிசக்தி அமைச்சு முற்றுகை
தங்களுக்கான எரிபொருள் அளவை அதிகரித்து வழங்குமாறு கோரி முச்சக்கரவண்டி சாரதிகள் மின்சக்தி, எரிசக்தி அமைச்சை முற்றுகையிட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டிகளுக்கு வாராந்தம் வழங்கப்படும் ஐந்து லீட்டர் எரிபொருள், தேவைக்கேற்ப போதுமானதாக இல்லை என்று முச்சக்கரவண்டிகள் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
எனினும் அவர்களுக்கான எரிபொருள் கோட்டா இதுவரை அதிகரிக்கப்படவில்லை.
முச்சக்கரவண்டி சாரதிகளின் கோரிக்கை
இந்நிலையில் முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மின்சக்தி, எரிசக்தி அமைச்சின் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்று வருகின்றது.
தங்களுக்கான எரிபொருள் கோட்டா அதிகரித்து வழங்கப்படும் வரை அந்த இடத்திலிருந்து தாங்கள் அகலப் போவதில்லை என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மீண்டும் வரிசைகள்
இதற்கிடையே எரிபொருள் விநியோகம் கிடைக்காத நிலையில் இன்றைய தினம் இலங்கையின் பல பாகங்களிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிந்துள்ளது.
அதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக முன்னர் போன்று நீண்ட வரிசைகள் உருவாகத் தொடங்கியுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.