முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு பயணத் தடை! கடவுச்சீட்டையும் ஒப்படைக்குமாறு அறிவிப்பு
இலஞ்ச ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது.
விசாரணை முடியும் வரை அவர்கள் வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு சதொச ஊழியர்களை தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தியதன் மூலம் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக மூவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு உத்தரவு
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை தலா 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 1 மில்லியன் இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
அத்தோடு கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் கைரேகைகளையும் சமர்ப்பிக்குமாறும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் சதொச முன்னாள் பணிப்பாளர் ராஜ் மொஹிதீன் மொஹமட் சாகீர் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை 9 மற்றும் 12 க்கு இடையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.