இந்திய ரூபாவில் வர்த்தகத்தை தொடர்வதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பம்
இந்தியாவும் இலங்கையும் 'மின்சக்தி, எரிசக்தி துறை மற்றும் ரூபாய் வர்த்தகம் தொடர்பான அம்சங்களில்' இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த உள்ளமையால், இந்திய ரூபாயில் வர்த்தகத்தைத் தொடர்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.
இதன்படி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அதிகாரியான பிரமோத் குமார் மிஸ்ரா, இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவை புதுடெல்லியில் சந்தித்து, கடன் மறுசீரமைப்பு உட்பட பல விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒருங்கிணைப்பு இலங்கையின் பொருளாதார மீட்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை உயர்ஸ்தானிகர் வலியுறுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர்களுக்குப் பதிலாக இந்திய ரூபா
அத்துடன் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒருங்கிணைப்பு, இலங்கையில் இந்திய முதலீடுகள் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துதல், இருதரப்பு வர்த்தகத்தை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள், மின்சாரம் மற்றும் எரிசக்தி துறையில் ஒத்துழைப்பு மற்றும் ரூபாய் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள் ஆகியவை இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டன.
இதேவேளை இலங்கையின் பல வங்கிகள் வொஸ்ட்ரோ கணக்குகள் எனப்படும் சிறப்பு ரூபாய் வர்த்தக கணக்குகளை திறந்துள்ளன.
இதன் பொருள், இலங்கைப் பிரஜைகள் இப்போது 10,000 இந்திய ரூபாய்களை வைத்திருக்க முடியும் அத்துடன், அவர்களது இந்திய சகாக்களுடன் பரிவர்த்தனைகளுக்கு அமெரிக்க டொலர்களுக்குப் பதிலாக இந்திய
ரூபாயைப் பயன்படுத்தலாம் என்ற விடயம் தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வுகள்
நடத்தப்பட வேண்டும் என்று இந்திய அதிகாரி பிரமோத் குமார் மிஸ்ரா, இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவை ஆகியோர் இணக்கம் கண்டுள்ளனர்.