நாணயங்களின் அடிப்படையில் காலத்தைக் கணிக்க முடியாது : செம்மணி அறிக்கையில் தகவல்
புதைகுழியொன்றில் மீட்கப்படும் நாணயத்தை வைத்து அந்தப் புதைகுழியின் காலத்தைத் தீர்மானிக்க முடியாது என தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றுக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செம்மணிப் புதைகுழி தொடர்பான தடயவியல் அறிக்கை பேராசிரியர் ராஜ் சோமதேவவால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம்(19.10.2026) சமர்ப்பிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட நாணயக்குற்றியில் 1870ஆம் ஆண்டு
அந்த அறிக்கையில் உள்ள முக்கியமான அம்சங்களாவன, செம்மணிப் புதைகுழி அகழ்வாய்வின்போது காலத்தை நிர்ணயிக்க உதவும் சான்றுப்பொருளாக நாணயங்கள் மட்டுமே கிடைத்தன.

கிடைத்த நாணயங்களில் பெரும்பாலானவை கடுமையாக அரிக்கப்பட்டிருந்ததால், அவற்றின் மேற்பரப்பு அம்சங்களையும் பொறிக்கப்பட்ட எழுத்துகளையும் அடையாளம் காண்பது கடினமாக இருந்தது.
367ஆவதாக அடையாளப்படுத்தப்பட்ட என்புத் தொகுதியுடன் மீட்கப்பட்ட நாணயக்குற்றியில் 1870ஆம் ஆண்டு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆரம்பகட்டப் பாதுகாப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்குப் பின்னர் இதை எம்மால் அவதானிக்க முடிந்தது. 367ஆவதாக அடையாளப்படுத்தப்பட்ட என்புத் தொகுதியுடன் மீட்கப்பட்ட நாணயக்குற்றி ஒரு காலக்குறிப்பை எமக்குச் சுட்டிக்காட்டினாலும் அதனை மட்டும் அடிப்படையாகக் கொண்டு புதைகுழியில் காலத்தைத் தீர்மானிக்க முடியாது.
புதைகுழிகளின் ஒப்பீட்டுக் கால நிர்ணயத்தை மேற்கொள்ளும்போது மிகுந்த எச்சரிக்கை அவசியமாகும். எனவே, நாணயங்களை புதைகுழிக்கான காலமாகக் கொள்வது அடிப்படையில் தவறாக அமையும் என்றுள்ளது.
ஒரே தருணத்தில் நிகழ்ந்த புதைப்பாக தெரியவில்லை
மேலும் உள்ளதாவது, செம்மணிப் புதைகுழியின் அகழ்வுப் பகுதி கிழக்கு, தென்கிழக்குத் திசைகளில் விரிவுபடுத்தப்பட்டபோது, கணிசமான தடிமனைக் கொண்ட சாம்பல் படிவு கண்டறியப்பட்டது.
இந்தப் பகுதியிலிருந்து தென்கிழக்கே அண்ணளவாக 5 தொடக்கம் 6 மீற்றர் தொலைவில் மயானத்தின் தகன மேடை அமைந்துள்ளது. அந்தத் தகன மேடையின் தாங்குச் சுவர் கட்டப்பட்டபோது, புதிய கட்டமைப்பை அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த தகனப் பகுதி இடித்துச் சுத்தப்படுத்தப்பட்டு சமப்படுத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

அகழ்வாய்வில் அடையாளம் காணப்பட்ட தடிமனான சாம்பல் படிவு, இந்தச் செயல்பாட்டின் விளைவாக எஞ்சியிருந்த சாம்பல் குவியலாகப் பொருள் கொள்ளப்படுகிறது.
இந்தச் சாம்பல் படிவத்திலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான நாணயங்கள் மீட்கப்பட்டன. அகழ்வுப் பகுதியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்களுடன் தொடர்புடைய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களுடன் ஒப்பிடுகையில், இங்கு கிடைத்த நாணயங்கள் பொதுவாகச் சிறந்த நிலையில் பாதுகாக்கப்பட்டிருந்தன.
இதனால், அவற்றில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகளையும் நாணயங்கள் அச்சிடப்பட்ட ஆண்டுகளையும் ஒப்பீட்டளவில் எளிதாக அடையாளம் காண முடிந்தது. ஆரம்பகட்டப் பாதுகாப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்குப் பின்னர், கி.பி. 1920, 1944, 1963, 1975, 1978, 1982, 1991 மற்றும் 1994ஆம் ஆண்டுக் குறிப்புகள் பொறிக்கப்பட்ட நாணயங்களாக அவை உள்ளன என்பதை அவதானிக்க முடிந்தது.
இந்த நாணயங்களின் காலப்பகிர்வு, தொடர்ச்சியற்ற காலவரிசையைக் காட்டுகிறது. அதாவது, பதிவுசெய்யப்பட்ட சில நாணயங்களின் அச்சிடப்பட்ட ஆண்டுகளுக்கு இடையில் கணிசமான கால இடைவெளிகள் காணப்படுகின்றன.
இதன் அடிப்படையில், இந்த நாணயங்கள் ஒரே நேரத்தில் நிகழ்ந்த ஒரு புதைப்பு நிகழ்வின் விளைவாக இல்லாமல், நீண்ட காலப்பகுதியில் படிப்படியாகச் சேர்ந்த பொருள்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது என்றுள்ளது.
மகிந்தவின் உயிரைப் பறிக்கும் பாரிய சதித் திட்டம்! நீதிமன்ற சாட்சியத்தை அம்பலப்படுத்தும் சரத் வீரசேகர