முச்சக்கர வண்டி கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தங்களின் முச்சக்கர வண்டிகளுக்கு மேலும் 30 லீட்டர் பெற்றோலை அனுமதித்தால் மட்டுமே பயணிகளுக்கான கட்டணத்தை குறைக்க முடியும் என முச்சக்கர வண்டி சாரதிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
92 ஒக்டேன் பெற்றோல் லீட்டருக்கு 40 ரூபாவால் குறைக்கப்பட்டாலும், முச்சக்கர வண்டி பயணக்கட்டணத்தில் திருத்தம் செய்யப்படாது என தேசிய கூட்டு முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழில் தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளர் ரோஹன பெரேரா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை குறைப்பு
எரிபொருள் விலை குறைக்கப்பட்ட நிலையில் தற்போது லீட்டர் ஒன்று 370 ரூபாவாக உள்ளபோதும், இது உராய்வு எண்ணெய், டயர், டியூப், மின்கலம், வாகன வரிகள் ஆகியவற்றுடன் பார்க்கும்போது அதிகமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சங்கம் என்ற வகையில், 20,000 தொழில்முறை முச்சக்கர வண்டி சாரதிகளின் பட்டியல் அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனினும் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு இன்னும் ஒரு வாரத்திற்கு ஐந்து லீட்டர் பெற்றோல் வழங்கப்படுகிறது என்று பெரேரா குற்றம்சாட்டினார்.
எனவே, 30 லீட்டர் பெற்றோல் வழங்கப்படும் வரை, எந்தவொரு வாடகைக் கட்டணத்
திருத்தத்தையும் மேற்கொள்வதில்லை என சங்கம் தீர்மானித்துள்ளதாக பெரேரா மேலும்
தெரிவித்துள்ளார்.