ஆசிரியர் உட்பட மூன்று மாணவர்களின் சடலங்கள் பெருமளவான மக்களின் கண்ணீருடன் நல்லடக்கம் (video)
மட்டக்களப்பு தாந்தாமலையில் உள்ள குளம் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.02.2023) படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த ஆசிரியர் உட்பட மூன்று மாணவர்களின் சடலங்கள் பெருமளவான மக்களின் கண்ணீருடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட பகுதி சோகத்தில் மூழ்கியது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை – தாந்தாமலை பகுதியில் உள்ள மீனச்சிம்பேடி குளத்தில் பாடசாலை மாணவர்கள் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நீரில் மூழ்கி உயிரிழப்பு
இதன்போது, ஆசிரியர் ஒருவர் மற்றும் மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் உயிரிழந்திருந்தனர்.
களுமுந்தன் வெளியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசிரியர் யோகேஸ்வரன் கிவேந்தன் மற்றும் 16 வயதுடைய மாணவர்களான தயாபரன் ரஜிர்த்தனன், சத்தியசீலன் தனுஜன், வீரசிங்கம் விதுசன் என்பவர்களே இவ்வாறு உயிரிழந்திருந்தனர்.
நேற்று (13.02.2023) மாலை உயிரிழந்தவர்களின் சடலங்கள் மட்டக்களப்பு களுமுந்தன்வெளி கிராமத்திலுள்ள உயிரிழந்த ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சடலங்கள் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இலவசமாக கல்வி கற்பித்துள்ளார்
இவர்களில் ஆசிரியரான யோகேஸ்வரன் கிவேதன் வர்த்தக துறையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினைப் பூர்த்தி செய்து, இலவசமாக தமது பிரதேச மாணவர்களுக்கு மாலை நேரங்களில் கல்வி கற்பித்து வந்துள்ளதுடன் பகுதி நேரமாக தனியார் இணைய வானொலிகளில் அறிவிப்பாளராவும் பணிபுரிந்துள்ளார்.
அத்தோடு மாணவர்களான வீரசிங்கம் விதுசன் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது ஆண் பிள்ளையாகவும், சத்தியசீலன் தனுஜன் நான்கு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் கடைசி ஆண் பிள்ளையாகவும், தயாபரன் ரஜிர்த்தனன் இரண்டு பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் மூத்த பிள்ளையாகவும் இருந்துள்ளனர்.
இவர்களின் உடல்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையினை தொடர்ந்து நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மக்கள் அஞ்சலி
சடலம் வீடுகளுக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்ட சமயம் மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வந்த மக்கள் உடலங்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், இரா.துரைரெட்னம் ஆகியோரும் நேரில்வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இவர்களின் குடும்பத்தார், உற்றார் மற்றும் உறவினர்கள்
கதறியழ உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஊர்வலமாக வீதி வழியாக கொண்டு
செல்லப்பட்டு களுமுந்தன்வெளி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.