அம்பாறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிள்ளைகள்: தந்தை அளித்த வாக்குமூலம்
தனது இரு விசேட தேவையுடைய பிள்ளைகளையும் பராமரித்து வந்த மனைவியின் இழப்பு தன்னை வெகுவாக பாதித்து இருந்தமையால்தான் இரண்டு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொன்றதாக தந்தை வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பகுதியில் இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தானும் தவறான முடிவெடுக்க முயற்சி செய்த தந்தை கல்முனை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குறித்த வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
மேலும், தனது இரு விசேட தேவையுடைய பிள்ளைகளையும் பராமரித்து வந்த மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்த நிலையில் மனைவியின் இழப்பு தன்னை வெகுவாக பாதித்திருந்ததாகவும் இதனால் எனது பிள்ளைகளை பராமரிப்பதற்கு சிரமமாக இருந்த காரணத்தினால் தான் இவ்வாறு செயற்பட்டதாக கொலைக்குற்றவாளியான தந்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது வீட்டில் இருந்த இரு பிள்ளைகளும் படுக்கையில் வைத்தபடி பல வகை கத்தி வகைகளை கொண்டு திடீரென கழுத்தை வெட்டிய தந்தை சம்பவத்தை கைத்தொலைபேசி ஊடாக தனது சகோதர சகோதரிகளுக்கு அறிவித்துள்ளார்.
பின்னர் சம்பவ வீட்டிற்கு உடனடியாக வந்த சகோதர, சகோதரிகள் அங்கு கண்ட காட்சியை கண்டு அபயக்குரல் எழுப்பியதுடன் கத்தியோடு கொலை செய்து காணப்பட்ட தனது சகோதரனை அருகில் உள்ள கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பொதுமக்களின் உதவியுடன் அழைத்து சென்றுள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்தில் இரத்த வெள்ளத்துடன் காணப்பட்ட முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ்(வயது-29) மற்றும் முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா(வயது-15) ஆகியோரின் நிலை கண்டு அவ்விடத்தில் வந்திருந்த உறவினர்கள் மற்றும் மக்கள் பெரிய நீலாவணை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இதையடுத்து சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலங்கள் காணப்பட்ட வீட்டிற்கு உரிய பாதுகாப்பினை வழங்கியுள்ளனர்.மேலும், தடயவியல் பொலிஸாரும் மோப்பநாய் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் கல்முனை நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் அங்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு இறுதியாக பிரேத பரிசோதனைக்காக உடலங்கள் அம்பாறை பொது வைத்தியசாலை அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் இரவு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
உடலங்கள் இன்று(15) நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில் வெளிநாட்டில் இருந்து இரு சகோதரர்களின் வருகைக்காக காத்திருப்பதாக உறவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |