இது வசீம் தாஜுடின் வாரம்: அரசாங்கத்தை விமர்சிக்கும் நாமல்
அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டிலும் ஒவ்வொரு வாரத்திலும் ஒவ்வொரு அரசியல் பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் இந்த வாரம் வசீம் தாஜுடின் பிரசார வாரம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பில் நேற்றைய தினம் பொலிஸாரினால் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்செயலுடன் தமக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என அவர் மீண்டும் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் இந்த விடயங்களை ஊடகங்களில் தெரிவித்திருந்தார். இந்த மரணம் தொடர்பில் ஊடகங்களில் பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட வேண்டிய விடயங்களையே பொலிஸ் ஊடகப் பிரிவினர் ஊடகங்களிடம் தெரிவித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கமும் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் இவ்வாறானதொரு ஊடக கண்காட்சி நடத்தியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் இவ்வாறு வாரத்திற்கு ஒரு விடயத்தை கொண்டு வந்து மக்களை திசை திருப்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் வாரம், ஐஸ் வாரம் தாஜுதீன் வாரம் என இந்த வாரங்கள் நீள்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய நபரை அவரது மனைவி அடையாளம் காட்டியதாக கூறப்படுவதாகவும் அந்த சந்தேக நபர் இடுப்பில் கை வைத்திருந்த விதத்தைப் பார்த்து அவர் தனது கணவர் என குறித்த பெண் அடையாளம் காட்டியதாகவும் தெரிவிக்கப்படுவதாக சுட்டிக்காட்டி உள்ளார்.
குறித்த பெண் கடந்த காலங்களில் யாருடன் இருந்தார் அவர் என்ன செய்தார் அவர் யார் யாருடன் தொடர்புடையவர் என்பது குறித்த விடயங்களையும் விசாரணை செய்ய வேண்டும் என நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் மேடைகளில் வசீம் தாஜூதீன் குறித்து பேசுவதை விடுத்து தாஜூதீனுக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி நவடடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்யத் தவறினால் அது அவரது ஆன்மாவிற்கு செய்யும் அவமரியாதையாகும் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



