மட்டக்களப்பில் வீடு உடைத்து தங்க ஆபரணங்களை திருடிய நபர் கைது
மட்டக்களப்பு நகரில் பூட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து தங்க ஆபரணங்களை திருடிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(17.10.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு செபஸ்தியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளர்கள் கடந்த 14 ஆம் திகதி பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர்.
திருட்டு
இந்த நிலையில் பூட்டியிருந்த வீட்டின் மதில் மீது ஏறி குதித்து திருடன் வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த மோதிரம், காப்பு, தோடு சங்கிலி உள்ளிட்ட 30 இலட்சம் பெறுமதியான 8 பவுன் தங்க ஆபரணங்கள் மற்றும் கவரிங் ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளான்.

இதையடுத்து பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு குழுவினர் வீட்டில் பொருத்தியிருந்த சிசிரி கமராவில் பதிவாகிய காணொளி காட்சியை கொண்டு விசாரணையினை மேற்கொண்டனர்.
இதன்போது ஊறணி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரை கைது செய்ததுடன் திருடப்பட் தங்க ஆபரணம், விற்பனை செய்த தங்க ஆபரணங்கள் மற்றும் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்களை மீட்டனர்.
மேலதிக விசாரணை
இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.