மகிந்த ராஜபக்ச மீது இன்னும் நம்பிக்கை இருக்கின்றது-அமைச்சர் தாரக பாலசூரிய
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது இன்னும் நம்பிக்கை இருப்பதாகவும் பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி இருப்போரை மீண்டும் இணைத்துக்கொள்ளும் தேவை இருப்பதாகவும் வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீதுள்ள நம்பிக்கை காரணமாகவே அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்தனர். இந்த அணிகளை இணைத்துக்கொள்ள வேண்டும்.
தற்போதைய ஜனாதிபதியையும் கூட்டணியில் இணைத்துக்கொள்ள வேண்டும்

அவர்களை புறந்தள்ளி விட்டு அரசியல் பயணத்தை மேற்கொள்ள முடியாது. அரசியலில் பலரை இணைத்துக்கொண்டே பயணத்தை முன்னெடுக்க முடியும்.
எதிர்காலத்தில் விரிவான கூட்டணியை அமைக்க வேண்டும். நாங்கள் தற்போது ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதியின் கீழ் பணியாற்றி வருகின்றோம். அவர் பல சாதகமான தீர்மானங்களை எடுத்துள்ளார். நாடு இருந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
வரிசைகள் இல்லை. எரிபொருள், எரிவாயு வரிசைகளை தற்போது காணமுடியவில்லை. மருந்துக்கு தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய ஜனாதிபதியையும் எமது அரசியல் பயணத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும்.
சுதந்திரக்கட்சியினர் உட்பட கட்சிகள் ஜனாதிபதியை ஆதரிக்கின்றன

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த பலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். குமார வெல்கமவும் புதிய கட்சியை ஆரம்பித்து ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்து வருகிறார்.
தொண்டமான், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்து வருகிறார். இதனால், விரிவான அரசியல் கூட்டணியை உருவாக்கி அரசியல் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு எனவும் தாரக பாலசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.