கடும் அதிருப்தியில் பொதுஜன பெரமுனவின் இளம் அரசியல்வாதிகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகள் சம்பந்தமாக அந்த கட்சியின் இளம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுஜன பெரமுன இன்னும் பாடம் கற்கவில்லை

கட்சி பக்குவமற்ற நிலைமையில் தொடர்ந்தும் செயற்படுவது, 2015 ஆம் ஆண்டு தோல்வி மற்றும் இந்த வருடம் நாட்டில் நடந்த சம்பவங்களால் பாடங்களை கற்று செயற்படாததன் காரணமாக இந்த நிலைமையேற்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூறியுள்ளனர்.
இந்த நிலைமை காரணமாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி, அணியாக பிரிந்து ஆங்காங்கே கலந்துரையாட ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
பொதுஜன பெரமுனவின் கூட்டங்களில் கலந்துக்கொள்ளாத இளம் அரசியல்வாதிகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான பொதுக்கூட்டங்கள் அண்மையில் சில மாவட்டங்களில் நடத்தப்பட்ட போதிலும் அந்த கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அவற்றில் கலந்துக்கொள்ளவில்லை.
அவர்கள் மத்தியில் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்தியே இதற்கு காரணம் என பேசப்படுகிறது.
மகிந்தவுடன் மீண்டும் எழுவோம் என்ற தலைப்பில் பொதுஜன பெரமுன நடத்தி வரும் பொதுக்கூட்டங்கள் கண்டி நாவலப்பிட்டி, களுத்துறை, புத்தளம் ஆராச்சிக்கட்டு பிரதேசங்களில் அண்மையில் நடைபெற்றன.
இவற்றில் அந்த கட்சியை சேர்ந்த பல முக்கியஸ்தர்களும், இளம் நாடாமன்ற உறுப்பினர்களும் கலந்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.