புதிய முகமூடியுடன் தொடரும் தமிழருக்கு எதிரான போர்!
போரின் முடிவா? அல்லது ஒரு புதிய யுத்தத்தின் துவக்கமா? என கருதுமளவுக்கு 2009 மே 18 என்பது இலங்கையின் ஜனநாயக அரசியலில் இது ஒரு முக்கிய நாளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ் மக்களின் வாழ்வில் அந்த நாள் முதல் தொடங்கியது ஒரு புதிய பரிதாபத் தொடர். தோல்வியைச் சுமந்த தமிழ் சமூகத்தின் மீது சிங்கள பேரினவாதம் வெற்றி கொண்ட வெறியோடு தன் திட்டங்களை உருவாக்கத் தொடங்கியது.
விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனித்து போனாலும், தமிழரின் அடையாளம் மற்றும் உரிமைகள் மீது நடத்தப்படும் வேறொரு சுரண்டல் யுத்தம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது.
பயங்கரவாத தடைச் சட்டம்
யுத்தத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கையை உலகமே வினவுகிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் மதிப்பீட்டின் படி, போரின் இறுதி 6 மாதங்களில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
சில மனித உரிமை அமைப்புகள் இந்த எண்ணிக்கை 70,000 வரை இருக்கலாம் எனக் கூறுகின்றன. இத்தனை உயிர்கள், நீதியின்றி அழிந்துவிட்டன. இதுவரை இந்த இழப்புக்களுக்கான விசாரணை கூட நடத்தப்படவில்லை.
அவர்களது இழப்புக்கான பரிகார நீதி கூட கிடைக்கவில்லை. இது ஒருபுறமிருக்க, 2020 ஆம் ஆண்டு சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் வெளியிட்ட புள்ளி விபரப்படி, 23,586 தமிழர்கள் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் பலர் இராணுவத்தின் பொறுப்பில் கடைசியாக கையளிக்கப்பட்டவர்கள். இந்த நவீன காலத்தில் உலகிலேயே அதிகளவிலான காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இலங்கையில் தான் இருக்கின்றனர் என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல வருடங்களாக வீதியில் இறங்கி நீதி கேட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் அவர்களுக்கான நீதி கூட மறுக்கப்பட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பல தாய்மார் தமது பிளளைகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலேயே மரணித்துப் போயுமுள்ளனர். 1979 இல் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் 2009இன் பின்னும் தமிழர்கள் மீது வெகுவாகப் பயன்படுத்தப்பட்டது.

30 கோடி கேட்டதில் சிக்குவார்களா தேசபந்து மற்றும் டிரான் : நீதிமன்ற வாயிலில் வைத்து அம்பலமான இரகசியம்
புதிய பௌத்த விகாரைகள்
2022இல் மட்டும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைதி மற்றும் நீதிக்கான இலங்கை பிரச்சாரம் அமைப்பின் கூற்றின் படி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 90 வீதமான பேர் தமிழர்கள் எனக் கூறுகின்றது.
நீதிமன்ற உத்தரவு இல்லாமல் 18 மாதங்கள் வரை கைது செய்து சிறையில் வைக்க இந்தச் சட்டம் அனுமதிக்கிறது. இது சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறும் ஒரு சட்டம் என்பதை சர்வதேச மன்னிப்புச் சபை நேரடியாகக் கூறுகிறது.
பண்பாட்டு அழிவின் வேர்கள் வடக்கிலும் கிழக்கிலும் போர் முடிந்த பிறகும் தொடர்கிறது. இராணுவம் 96,000 ஏக்கர் நிலங்களைப் பிடித்து வைத்துள்ளதாக சீபிஏ 2024 ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. இது தமிழர்களின் வாழ்க்கைத் தொழில்கள், விவசாயம், மீன்பிடி ஆகியவற்றை முற்றிலும் பாதித்துள்ளது. இதே நேரத்தில், பழைய இந்து கோவில்கள் இருந்த இடங்களில் புதிய பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளன.
2020-2024 காலப்பகுதியில் மட்டும், வடகிழக்கில் 128 பௌத்த விகாரைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இது ஒரு திட்டமிட்ட பண்பாட்டு அழிவாக பார்க்கப்படுகிறது. கடந்த கால அரசாங்கம் மட்டுமன்றி தற்போதைய அனுர அரசாங்கமும் பௌத்தமயமாக்கல் செயற்பாட்டை கைவிட்டதாக தெரியவில்லை.
அரசியல் நோக்கம் என்ன
இன்று இலங்கையில் மாற்று அரசியலாக பேசப்படும் ஜனத்தா விமுக்தி பெரமுன. மக்கள் இடையே ஊழலற்ற ஆட்சி எனக் கூறி வாக்கு வங்கியை அதிகரித்துள்ளது.
ஆனால் அவர்கள் உண்மையான அரசியல் நோக்கம் என்ன? 2022 ஒக்டோபர் மாதத்தில், ஜேவிபி தலைவர் அநுர குமார திஸாநாயக்க, 'ஈழம் பற்றிய பேச்சு தேச விரோதம். ஒரே தேசம், ஒரே தேசியம் வேண்டும்' என்றார்.
இது, தமிழர்களின் தனித்துவ அடையாளத்தையே நிராகரிக்கும் சிங்கள தேசிய சிந்தனை ஆகும். 2023 தேர்தல் பிரசார ஆவணங்களில், ஜேவிபி அதாவது தேசிய மக்கள் சக்தி சார்பில், தமிழர் உரிமைகள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், தமிழர் பகுதிகள் பற்றி எந்த ஒரு திட்டமும் இல்லை. ஜனநாயக சமநிலை, அங்கீகாரம், நீதிமன்ற விசாரணை, அரசியல் தண்டனை பற்றிய உள்ளடக்கங்களை முழுமையாக காணமுடியவில்லை.
இதனால், ஜேவிபி புதிய மாற்று அரசியல் சக்தியாக இல்லை. அது புதிய முகமொன்றை அணிந்த பழைய சிங்கள பேரின வாதத்தையே பிரதிபலிக்கின்றது. தமிழர்களுக்கான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. அவர்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள், காணாமல் போன உறவுகள், நீதியின்றி சிறை வைக்கப்படும் மனிதர்கள், பண்பாட்டு அழிவுகள் அனைத்தும் தொடர்கின்றன.
சர்வதேசம் 'போர் முடிந்துவிட்டது' என கூறுகின்ற போதும், தமிழர் மீது சட்ட, மொழி, பண்பாடு மற்றும் நிலத்திற்கு எதிரான மறைமுக யுத்தம் ஒரு அமைதியான முகமூடியுடன் நடத்தப்படுகிறது. இந்நிலையில், ஜேவிபி போல மாறுபட்ட பெயரில் புதிய வகை பேரினவாதங்கள் உருவாகின்றன. இவற்றை தோற்கடிக்க, உண்மை தரவுகளைப் தமிழர் தேசம் அறிந்து கொள்ள வேண்டும். அவற்றுடன், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் தமிழ் சமூகத்தின் உறுதியான செயற்பாடுகள் தான் எதிர்கால இருப்புக்கு வழிகாட்டும்.