இலங்கை அரசியலில் படர்ந்திருக்கும் ராஜபக்சர்களின் நிழல்
இலங்கையில் மக்கள் புரட்சியினால் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமின்மைக்கு பின்னர் அனைத்து அதிகாரம் படைத்த ராஜபக்சக்களும் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ராஜபக்ச சகோதரர்கள் அதிகார அமைப்பில் இருந்து வெளிப்படையாக வெளியேறினாலும், இலங்கை அரசியலில் அவர்களின் செல்வாக்கு இன்னும் அதிகமாகவே இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். ஆனால், அவர் பரிந்துரைத்த ரணில் விக்ரமசிங்கதான் இப்போது ஜனாதிபதியாக இருக்கின்றார்.
ரணில் விக்ரமசிங்க முதலில் கோட்டாபய ராஜபக்சவினால் தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார், பின்னர் ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்ட பின்னர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியாக பதவியேற்றார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முதல் நடவடிக்கைகளில் ஒன்று, அவருக்கு முன் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்கியது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்ச குடும்பத்தின் விசுவாசியான தினேஷ் குணவர்தனவை பிரதமராக நியமித்தார்.
தற்போதைய இக்கட்டான நிலையை தற்காலிக பின்னடைவு
தினேஷ் குணவர்தன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பள்ளித் தோழராவார். இதற்கு முன்னர் கோட்டாபய ராஜபக்சவின் கீழ் வெளிவிவகார அமைச்சராகவும், கல்வி அமைச்சராகவும், பின்னர் உள்துறை அமைச்சராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்ச, தமது வம்சத்தின் நற்பெயரை எவ்வாறு மீட்டெடுப்பது என்று ஏற்கனவே யோசித்து வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய இக்கட்டான நிலையை தற்காலிக பின்னடைவு என்று அண்மையில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போது நாமல் ராஜபக்ச விவரித்தார்.
மேலும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு எங்களால் முடிந்த அளவு ஸ்திரத்தன்மையை வழங்குவதும், இதற்கிடையில் நீண்டகாலமாக வேலை செய்வதும் தான் இப்போது இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ச 2005 முதல் 2015 வரை உயர் பதவியில் இருந்த 76 வயதான மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் ஆவார். அடுத்த தலைமுறையிலிருந்து ராஜபக்ச ஆட்சியைக் கைப்பற்றும் முக்கிய நபராக அவர் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.