நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பினரை பயங்கரவாதிகளென்று அழைத்த ஆளும் கட்சி! இருவர் வெளிநடப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை புலிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் அழைத்தமையால்,வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு கூட்டத்தில் இன்று பதற்றமான சூழ்நிலையொன்று நிலவியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், ஆலோசனைக்கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலின் சில பிரச்சினைகளை எழுப்ப முயன்றபோதே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி மறுத்துள்ளதுடன்,மாறாக அவர்களை நோக்கியும் சத்தமிட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களை பயங்கரவாதிகள் என்று அழைத்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ .சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததாகவும்,இது மிகவும் துரதிஷ்டவசமான சம்பவமென்றும், இந்த சபையில் இடம்பெற்ற ஒரு சோகமான தருணம் என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தைக்கு ஆளும் கட்சி
உறுப்பினரான சந்திம வீரக்கொடி மட்டுமே எதிர்ப்பை வெளியிட்டார் என்றும்
சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
