பாணின் விலையை 50 ரூபாவால் குறைக்கலாம்
அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்குமாயின் பாண் ஒன்றுக்கான விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பாண் ஒரு இறாத்தலின் விலையை 50 ரூபாவாலும், பணிஸ் ஒன்றின் விலையை 25 ரூபாவினாலும் குறைக்கமுடியும் என்று அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மக்களை நிம்மதியடையச் செய்ய முடியும்
ஏனைய வெதுப்பக பொருட்களின் விலையை கணிசமான அளவில் குறைத்து மக்களை நிம்மதியடையச் செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.
மேலும், வெதுப்பக உற்பத்திக்குத் தேவையான பிரதான பொருட்களான மாவு, சீனி, எண்ணெய், முட்டை போன்றவற்றின் விலைகள் பெருமளவு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக வெதுப்பக தொழிற்துறையை தற்போது கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாண், பணிஸ் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் இப்போது கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, அரசாங்கம் மற்றும் அதனுடைய நிறுவனங்கள் உதவி வழங்குமாயின் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையினை குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.