மஹிந்தவிற்கு எதிராக கிளம்பிய மக்கள்: போராட்டத்திற்கு வந்தவர்களை பேருந்திலிருந்து இறங்க விடாது தடுத்த பொலிஸார் (VIDEO)
புதிய இணைப்பு
யாழில் பிரதமரை வரவேற்கும் முகமாகக் கட்டப்பட்டு இருந்த பதாகைகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எரித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயமாக நேற்றையதினம் வந்திருந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச, இன்றையதினம் மட்டுவிலில் புதிதாகக் கட்டப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வுக்குப் பிரதமர் வருவதனை எதிர்த்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உள்ளிட்டோர் எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க முயன்றனர்.
நிகழ்வு நடைபெறும் இடத்தில் போராட்டத்தினை முன்னெடுக்க முல்லைத்தீவில் இருந்து, வந்திருந்தவர்களை மட்டுவில் அம்மன் ஆலயத்திற்கு அருகில் பொலிஸார் தடுத்து, வாகனத்திலிருந்து இறங்காதவாறு தடுத்து நிறுத்தி இருந்தனர்.
அதேவேளை யாழிலிருந்து சென்ற வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் மட்டுவில் வண்ணாத்தி பாலம் பகுதியில் தடுத்து நிறுத்திய பொலிஸார் அவர்களையும் வாகனத்தில் இருந்து இறங்காதவாறு தடுத்து நிறுத்தி இருந்தனர்.
அந்நிலையில் நிகழ்வினை முடித்துக்கொண்டு பிரதமர் நிகழ்விடத்தில் இருந்து புறப்பட்டதும், போராட வந்தவர்களை பொலிஸார் செல்வதற்கு அனுமதித்தனர்.
அதனை அடுத்து வாகனத்திலிருந்து இறங்கிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் , பிரதமரை வரவேற்றுக் கட்டப்பட்டு இருந்த பதாகைகளை கிழித்து , தீயிட்டு எரித்து தமது எதிர்ப்பினையும் ஆற்றாமையையும் வெளிப்படுத்தினர்.
முதலாம் இணைப்பு
யாழில் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த மக்கள், வீதியில் வழிமறிக்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் வாகன சாரதி பொலிஸாரின் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மகிந்த
ராஜபக்ச இன்றையதினம் மட்டுவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள
பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைக்கவுள்ளார்.
அந்நிலையில் குறித்த நிகழ்வு நடைபெறும் இடத்தில் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டு இருந்தது.
அதில் கலந்து கொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து பேருந்தில் வருகை தந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை மட்டுவில் அம்மன் கோவிலுக்கு அருகில் பொலிஸார் வழிமறித்துள்ளனர்.
அத்துடன் வாகனத்திலிருந்து எவரையும் இறங்கவிடாதவாறு, வாகனத்தின் இரு வாசல்களிலும் காவலுக்கு நிற்கும் நிலையில், சாரதியைக் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதேவேளை பொலிஸாரின் காவலையும் மீறி பேருந்திலிருந்து இறங்கிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வீதியில் அழுது புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை , மத்திய நிலைய பகுதியில் பெருமளவான பொலிஸார் , இராணுவத்தினர்
குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.