பிரித்தானியாவில் இலங்கையரை மிருகத்தனமாக தாக்கிய நபர் - நீதிமன்றம் கொடுத்த தண்டனை
பிரித்தானியாவில் போதை மருந்து மற்றும் மதுவை அருந்துவிட்டு இலங்கையரை கண்முன் தெரியாமல் கொடூரமாக தாக்கி கோமா நிலைக்கு செல்ல வைத்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Leicesterல் இந்த சம்பவம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி காலை 6.40 மணியளவில் நடந்த நிலையில் குற்றவாளி Callum McDermott (32)க்கான தண்டனை இரு தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கு 10 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சம்பவம் நடப்பதற்கு முந்தைய இரவு முழுவதும் கொக்கைன் போதை பொருள் மற்றும் மதுவை அருந்திய Callum காலை நேரத்தில் சாலையில் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி தகராறு செய்துள்ளார்.
அப்போது தான் இலங்கையர் ஒருவர் டாக்சியை ஓட்டி வந்த போது அதனை தடுத்து நிறுத்தியிருக்கிறார் Callum. பின்னர் 45 வயதான அந்த டாக்சி ஓட்டுனரை வெளியே இழுத்து போட்டு கண்முன் தெரியாமல் தாக்கியிருக்கிறார், இதோடு காவலர்களையும் தாக்கியிருக்கிறார்.
இந்த தாக்குதலில் இலங்கையரான அந்த ஓட்டுனர் மூக்கு உடைந்ததோடு முகத்தில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டு கோமா நிலைக்கே சென்றார். பல மாதங்களுக்குப் பிறகு, காயமடைந்த டாக்ஸி டிரைவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஆனால் அவரால் முன்பை போல டாக்சியை ஓட்ட முடியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். இலங்கையரின் 36 வயதான மனைவி கூறுகையில், தன்னை கொன்றிருக்கலாம் என என் கணவர் நினைக்கிறார்.
ஏனெனில் எங்கள் வாழ்க்கை பழையபடி இருக்காது என்பதாலேயே இப்படி என்னிடம் கூறினார். என் கணவர் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளார், அவருக்கு ஏதோ நடந்தது என்று தெரிகிறது ஆனால் என்னவென்று நினைவில் இல்லை.
நாங்கள் இலங்கையில் இருந்து வந்து பிரித்தானியாவில் வாழ்கிறோம், ஆனால் பிரித்தானியாவை விட்டு வெளியேறி தாய்நாட்டுக்கு செல்ல விரும்புவதாக அவர் அடிக்கடி கூறுவார். அந்த ஒருநாள் எங்கள் வாழ்க்கையையே மாற்றி புரட்டிபோட்டுவிட்டது.
என் மூத்த மகளுக்கு 10 வயதாகிறது, அப்பாவிற்கு ஏதோ நடந்திருக்கிறது, அவரிடம் மாற்றம் வந்துவிட்டது என்பதை உணர்ந்துள்ளார்.
தாக்குதல் நடந்த அன்று காலை அதிகாரிகள் எங்கள் வீட்டிற்கு வந்தபோது, அவர்கள் என்னிடம் பேசவோ அல்லது என்னிடம் ஏதாவது சொல்லவோ தான் இருக்கிறார்கள் என்று நினைத்தேன்.
ஆனால் என் கணவர் கடுமையாகத் தாக்கப்பட்டதை தான் கூறுவார்கள் என நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் பல நாட்களாக அதிர்ச்சியில் இருந்தேன், அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினரும் நண்பர்களும் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர்.
எனது கணவர் எப்படியாவது குணமடைந்து வேலைக்குத் திரும்புவார், நாங்கள் மீண்டும் ஒரு சாதாரண குடும்பமாக இருக்க முடியும் என்று இப்போதும் நம்புகிறேன் என உருக்கமாக கூறியுள்ளார்.