லண்டனில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர் வழக்கில் சிக்கிய நபர்
லண்டனில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 36 வயதுடைய நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ரஞ்சித் ரோய் கண்கணமாலாகே என்பவர் பல ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்துள்ளார். 50 வயது மதிக்கத்தக்க இவர் இலங்கையில் இருந்து 12 ஆண்டுகளுக்கு முன்பு பிரித்தானியா வந்துள்ளார்.
ஓரினச்சேர்க்கையாளரான இவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 16-ஆம் திகதி டவர் ஹேம்லெட்ஸ் கல்லறை பூங்காவில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அதன் பின் பொலிசார் அவரது உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்த போது, பிரேதபரிசோதனை அறிக்கையில், இவர் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இந்த கொலை சம்பத்தால் ஓரினச்சேர்க்கை சமூகத்தினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் இந்த சம்பவம் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் கொலையாளிகள் தொடர்பில் தகவல் வழங்கினால் 20,000 பவுண்ட் சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ஆம் திகதி 36 வயது மதிக்கத்தக்க எரிக் பெல்ட் என்பவரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் பின் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை எரிக் பெல்ட் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், தேம்ஸ் நீதிபதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
ரஞ்சித் ரோய் கண்கணமாலாகே மிகவும் அன்பான நபர் என அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் ஒரு லட்சியத்துடன் வாழ்ந்து வந்தார். ஆனால், என்ன நடந்தது என்பது தெரியவில்லை, இருப்பினும் இந்த மோசமான செயலில் ஈடுபட்ட நபர் சட்டத்தின் முன்பு தண்டிக்கப்படுவார் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.