அமெரிக்க இராணுவத்தின் கடைசி விமானமும் நாடு திரும்பியது! தலிபான்களின் முழு கட்டுப்பாட்டில் ஆப்கான்
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக கடந்த 20 ஆண்டுகளாக செய்த போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவி த்துள்ளது. அமெரிக்க ராணுவத்தின் கடைசி விமானம் காபூலில் உள்ள ஹமீட் கர்சாய் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றது.
2001ம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி அமெரி்க்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் தகர்த்தனர்.
அந்தத் தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்க தீர்மானித்தது. அப்போது ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து கொண்டிருந்த தலிபான்கள், தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதாக அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது.
அப்போது அங்கு காணப்பட்ட தலிபான்களின் ஆட்சியை அமெரிக்க படை வீழ்த்தியது. அதன் பின்னர் அங்கு ஜனநாயக ரீதியிலான ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டு , புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறுவப்பட்டது.
ஆனால் தோல்வி கண்ட தலிபான்கள் தங்களை பலப்படுத்திக் கொண்டு வந்தனர். இரண்டு தரப்பிற்க்கும் இடையில் போர் பல ஆண்டுகளாக நீண்டது. தலிபான்கள் தங்கள் எதிர்ப்பை வலுப்படுத்தினர்.
இருதரப்பிலும் நடந்த போரில் கடந்த 20 ஆண்டுகளில் அப்பாவி மக்கள் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர். இறுதிவரை அமெரிக்கா, நேட்டோ படைகளுக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை.
இதையடுத்து, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் படிப்படியாக விலக்கப்படும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன், ஓகஸ்ட் 31-ம் திகதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கனிலிருந்து வெளியேறும் என்று அறிவித்தார்.