பெரும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குழுவினரை மடக்கிப் பிடித்த களுவாஞ்சிகுடி பொலிஸார் (Photos)
மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் பெரும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குழுவினரை களுவாஞ்சிகுடி பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளதாக இன்று (19.01.2023) தெரிவித்தனர்.
கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை பிரதான வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து 54 பவுண் தங்க நகைகளும், 10 இலட்சம் ரூபா பணமும் களவாடப்பட்டிருந்தது.
இது குறித்து, தீவிர விசாரணைககளையும், தேடுதல்களையும் களுவாஞ்சிகுடி பொலிஸார் முடுக்கி விட்டிருந்த நிலையில், கடந்த 16.01.2023 அன்று அதிகாலை வேளையில் மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமடம் பகுதியில் வைத்து பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது
அவரிடமிருந்த கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேலும் 3 ஆண்களும் 1 பெண்ணுமாக மொத்தம் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் தற்போது கொச்சிக்கடையில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது சந்தேகநபர்கள் ஏறாவூரைச் சேர்ந்தவர்கள் எனவும், நான்காவது சந்தேக நபர் களுவாஞ்சிகுடியில் பிரபல வர்த்தகத்தில் ஈடுபடும் பெண் ஒருவரின் மகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐந்தாவது சந்தேக நபர் கொழும்பைச் சேர்ந்த நகைத் தொழிலில் ஈடுபடுபவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் மணப் பெண் அலங்காரம் பெய்து வருபவர் எனவும், தாம் அலங்காரம் செய்யும் பெண்களிடம் குறித்த கொள்ளையர்களை அனுப்பி இவ்வாறு களவுகளில் ஈடுபடச் செய்து வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பெருந்த தொகையான பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் அமெரிக்க தயாரிப்பிலான என்.61171 வர்க்க கைத் துப்ப்பாக்கி ஒன்று அமெரிக்க தயாரிப்பிலான 7.65 மில்லி மீட்டர் அளவிலான 3 தோட்டாக்கள், வெளிநாட்டு தயாரிப்பிலான எவ்.ஆர்.ஏ.ஜி.எஸ்.எவ்-87 ரக கைக்குண்டு ஒன்று, இரவு நேரத்தில் களவுகளுக்காக பயன்படுத்ததும் இருப்புக் கம்பி ஒன்று, போலி இலக்கத்தகடு கொண்ட ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்று, கையடக்கத் தொலைபேசிகள், 120 கிராம் உருக்கப்பட்ட தங்கக் கட்டி, தங்க மாலை ஒன்று மற்றும் குறடு, ஸ்கூட்றைவர், உள்ளிட்ட பல பொருட்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு 16.01.2023 அன்று கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற உத்தரவின் பெயரில் இரண்டு நாட்கள் பொலிஸ் தடுப்பு விசாரணையில் வைக்கப்பட்டு மீண்டும் புதன்கிழமை (18.01.2023) களுவாஞ்சிகுடி நீதவான் நீதி நீதிமன்றில் முன்னிலைப் படத்தப்பட்டு, பின்னர் எதிர்வரும் 31.01.2023 வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
களுவாஞ்சிகுடி பொலிஸ்
கைது செய்யப்பட்ட இக்குழு கடந்த வருடம் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள நீதிபதி ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம், உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என தெரியவருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த குறித்த குழு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மக்கள் இனிமேல் அச்சமின்றி நடமாட முடியும் எனவும் இதன்போது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.