தினேஷ் குணவர்தன செய்துள்ள பாரதூரமான ராஜதந்திர தவறு
இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மியன்மார் இராணுவ ஆட்சியின் வெளிவிவகார அமைச்சருக்கு, இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அழைப்பு கடிதம் ஒன்றை அனுப்பியது பாரதூரமான ராஜதந்திர தவறு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் தற்போதைய அரசாங்கம் சர்வதேச தொடர்புகள் குறித்து எவ்வித புரிந்துணர்வும் இன்றி செயற்பட்டு வருகிறது.
வெளிவிவகார அமைச்சின் இந்த அழைப்பு கடிதம் மூலம் மியன்மாரின் இராணுவ அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் மியன்மார் இராணுவ அரசாங்கத்திற்கு கடிதத்தை அனுப்புவதற்கு பதிலாக மியன்மாரில் நடந்த இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக பகிரங்க அறிக்கையை வெளியிட்டு, அந்நாட்டி ஜனநாயக தேர்தலில் ஆட்சிக்கு வந்த அணிக்காக குரல் கொடுத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.