அரசிடம் தமிழர்களின் பிரச்சினைகளை கோரிக்கையாக வைக்க வேண்டும் - சி. அ.யோதிலிங்கம்
அரசுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்வோர் தமிழர்களின் அன்றாட பிரச்சினையைத் தீர்ப்பதை அரசின் நல்லெண்ண கோரிக்கையாக முன்வைக்க வேண்டும் என அரசியல் ஆய்வாளர் சி. அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஐந்து வகையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள்.ஒன்று அரசியல் தீர்வு என்கிற அடிப்படை பிரச்சினை, இரண்டு இன அழிப்பிற்குச் சர்வதேச நீதி கோருகின்ற பிரச்சினை, மூன்றாவது அன்றாடம் இடம் பெறுகின்ற ஆக்கிரமிப்பு பிரச்சினை,நான்காவது காணிப்பறிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உட்பட இயல்பு நிலையைக் கொண்டுவருகின்ற பிரச்சினை, ஐந்தாவது போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களைப் பேணுதல் தொடக்கம் மக்கள் அன்றாடம் சந்திக்கின்ற அன்றாட பிரச்சினை, இந்த ஐந்து பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கின்ற. நெருக்கடி நிலையில் மக்கள் இருக்கிறார்கள்.
ஆகவே இந்த விடயங்கள் அரசினுடைய பேச்சுவார்த்தையில் முன்னுரிமை வகிக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.
இதில் அரசியல் தீர்வு விடயத்தையும், இன அழிப்பிற்குச் சர்வதேச விசாரணை கோருகின்ற விடயத்தையும் ஒரு நீண்டகால திட்டமாக கணிப்பிட்டு அதற்கு ஒரு கால அட்டவணையை நிர்ணயிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.