அரசாங்கம் நாட்டை அமெரிக்கா மற்றும் சீனாவின் தேவைகளுக்கு அமைய பயன்படுத்த இடமளித்துள்ளது! - புபுது ஜாகொட
தற்போதைய அரசாங்கம், அமெரிக்க தலைமையிலான நாடுகளின் தேவைக்காக இலங்கையை பயன்படுத்துவதுடன், மறுபுறம் சீன தலைமையிலான நாடுகளின் தேவைக்காக இலங்கையைப் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ள நிலையில், நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகள் இடையிலான சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான முத்தரப்பு தேசியப் பாதுகாப்பு ஆலோசனை செயலகம் ஒன்று நேற்று கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட,
இந்தியாவும் மாலைதீவும், அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளன.
இதனடிப்படையில் அமெரிக்காவின் தேவைக்கு அமைய இந்து சமுத்திரத்தைக் கையாளும் இணக்கமே இந்த உடன்படிக்கையில் உள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு வந்திருந்த போது, அரசாங்கம் சீனாவின் முத்துமாலை திட்டத்திற்கு அமைய இந்து சமுத்திரத்தை கையாள இணங்கியது.
இவ்வாறு மாறி மாறி இலங்கையைப் பயன்படுத்த அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் சமுத்திரத்தின் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்பதுடன் மக்களின் பாதுகாப்பும் அழிந்து விடும்.
1978ஆம் ஆண்டு அணி சேர அணிகளின் மாநாட்டில் இந்து சமுத்திரத்தை சமாதான பிராந்தியமாக வைத்திருப்பது என இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டது.
தற்போதைய உடன்படிக்கையின் மூலம் இந்த இணக்கப்பாடு முற்றிலும் மீறப்பட்டுள்ளது எனவும் புபுது ஜாகொட குறிப்பிட்டுள்ளார்.



