சுமந்திரனுக்கு தெரியாத அரசியலமைப்பா? தவராசா கேள்வி
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதிகளுக்கு பிணை வழங்கவோ புனர்வாழ்வு அளிக்கவோ அல்லது விடுதலை செய்யவோ நீதவான் நீதிமன்றிற்கு எந்த அதிகாரமும் சட்டத்தினால் வழங்கப்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த நேர்காணலில்,
கேள்வி:- 2015ஆம் ஆண்டு நாட்டின் சிறைச்சாலைகளில் 217 தமிழ் அரசியல் கைதிகள் சிறை வைக்கப்பட்டிருந்ததாகவும் அவற்றில் நல்லாட்சி அரசினால் பல அரசியல் கைதிகள் குறித்த பொறிமுறை மூலம் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றதே?
பதில்:- பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு மேல் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட ஒரு அரசியல் கைதி கூட 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசினால் 2019ம் ஆண்டுவரை விடுதலை செய்யப்படவில்லை.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்படுவதானால் மேல் நீதிமன்றங்களிலேயே குற்றப்பத்திரங்கள் (வழக்கு) தாக்கல் செய்யப்படவேண்டும்.
அவ்வாறு குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்ற கைதிகளோ அல்லது தண்டணை விதிக்கப்பட்ட கைதிகளோ நல்லாட்சியென கூறப்பட்ட அரசுடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தையினால் ஒரு அரசியல் கைதிகூட விடுதலை செய்யப்படவில்லை.
சந்தேகத்தின் அடிப்படையில் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களும் வழக்குத் தொடுக்க எந்த வித சான்றுகளும் இல்லாத சில கைதிகள்பொதுச்சட்டத்தின் கீழ் நீதவான் நீதிமன்றில் ; ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்தக் கைதிகளில் சில கைதிகளுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டு விடுதலை அளிக்கப்பட்டதுடன் சில கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டதுடன் சில கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு பிணை வழங்கப்பட்ட பல கைதிகள் இன்றும் நீதிமன்றம் வந்து செல்கின்றனர்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதிகளுக்கு பிணை வழங்கவோ புனர்வாழ்வு அளிக்கவோ அல்லது விடுதலை செய்யவோ நீதவான் நீதிமன்றிற்கு எந்த அதிகாரமும் சட்டத்தினால் வழங்கப்படவில்லை.
கேள்வி:- தமிழ் மக்களின் வாக்குகளை எதிர்பார்க்காமல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டபாய ராஜபக்ச 16 தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன ஒரு அரசியல் கைதிக்கு கூட ஏன் பொது மன்னிப்பு வழங்கவில்லை?
பதில்:- தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை ஒரு முக்கியமான விடயம். அதனை நாங்கள் செய்யாமல் தவற விட்ட விடயங்களில் அது ஒரு முக்கியமான விடயம். அதனை நான் ஒப்புக் கொள்ளுகின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆப்பிரகாம் சுமந்திரன் தொலைக்காட்சி ஒன்றுக்கு 27ம் திகதி வழங்கிய நேர்காணலில் இதற்கான பதிலில் கூறியுள்ளார். அவர் வழங்கிய பதிலில் கூறியதாவது,
“பகிரங்கமான குற்றச்சாட்டாக (நாடாளுமன்ற உறுப்பினர் ஆப்பிரகாம் சுமந்திரன்) நான் சொல்லுகின்றேன் அப்பொழுது நீதி அமைச்சராகவிருந்த விஜயதாச ராஜபக்ஸ அதில் ஒரு முட்டுக்கட்டையாக இருந்தார். அது நாங்கள் கண்டு கொண்ட விடயம்.
ஒரு தடைவை சம்பந்தன் ஜயா ஜனாதிபதியிடம் நேரடியாக சொன்னார். ஜனாதிபதி அவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. நீதி அமைச்சரின் பங்களிப்பு இந்த விடயத்தில் முக்கியமானது. இந்த விடயத்தில் அவர் பின்னடித்தார்.
பொது மன்னிப்பு விடயத்தில் அது எங்களது குறைபாடு. அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அதனை நாங்கள் தலைகீழாக நின்றாவது செய்திருக்க வேண்டும். நாங்கள் செய்யாமல் தவற விட்ட விடயங்களில் அது ஒரு முக்கியமான விடயம்.
அதனை நான் ஒப்புக்கொள்கின்றேன் என வெளிப்படையாகவே கூறியுள்ளார். பொது மன்னிப்பில் நீதி அமைச்சரான விஜயதாச ராஜபக்ஸவின் பரிந்துரையின்மையால் அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியப்படவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் நேர்காணலில் கூறியுள்ளார்”.
ஆனால் பொது மன்னிப்பில் விடுதலையான துமிந்த சில்வாவின் விடுதலைக்கும் தனக்கும் எதுவும் தொடர்பில்லை எனக்கு எதுவும் தெரியாது என்று நீதி அமைச்சர் அலி சப்ரி கைவிரித்துள்ளார்.
அவ்வாறெனில் சட்டப்படி பெற வேண்டிய நீதி அமைச்சரின் பரிந்துரையை பெறாமல் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதா? என்ற கேள்வி எழுகின்றதுடன் பொது மன்னிப்பு வழங்கிய விடயத்தில் கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் மனித உரிமை ஆணையாளர் கலாநிதி பிரதீபா மகநாமறேவா 1978ம் ஆண்டு இரண்டாவது குடியரசு யாப்பிலேயே குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான சரத்து உள்வாங்கப்பட்டுள்ளது.
அந்தச் சரத்தின்படி தீர்ப்பு அளித்த நீதிபதி சட்டமா அதிபர். மற்றும் நீதி அமைச்சரிடம் ஜனாதிபதி அறிக்கை கோரவேண்டும். அதனைச் செய்யாமல் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க முடியாது என்று அரசியலமைப்பில் கூறப்படவில்லை.
எனவே அரசியல் அமைப்பில் அது ஒரு கட்டாய நிபந்தனையாக உள்ளடக்கப்படவில்லையென குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் அவர்களுக்கு தெரியாத அரசியலமைப்பா?
என் மீது பல விமர்சனங்கள் 2015ம் ஆண்டு நல்லாட்சி காலத்தில் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு மேல் நீதிமன்றங்களில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் கைதிகளின் விடுதலை மற்றும் தண்டணை வழங்கப்பட்ட அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் விடயத்தில் சரியான பொறிமுறைகள் கையாளப்படாமையால் அரசியல் கைதிகளில் ஒருவர் கூட விடுதலை செய்யப்படவில்லையென நான் பல தடவைகள பல ஊடகங்களினதும் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போது என் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
கைதிகளின் விடுதலை விடயத்தில் சரியான பொறிமுறைகள் கையாளப்படாமையால் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லையென நான் முன்வைத்த காரணங்களை காலம் கடந்து ஒப்புதல் வாக்குமூலமாக பகிரங்கமாக நேர்காணலில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளமை; வரவேற்கத்தக்கது உண்மைகள் நீண்ட காலம் உறங்குவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.