முதுகெலும்புடைய தலைவர்களே நாட்டுக்குத் தேவை: கர்தினால் மெல்கம் ரஞ்சித்
முதுகெலும்புடைய தலைவர்களே நாட்டுக்குத் தேவை என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு அருகாமையில் இன்று நடைபெற்ற எதிர்ப்பு போராட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் சர்வதேசத்தின் உதவியை நாட நேரிடும் எனவும் அதில் எவ்வித மாற்றங்களும் கிடையாது எனவும் தெரிவித்தள்ளார்.
இந்த மண்ணில் உயிரிழந்தவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரையில் ஓயப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து விசாரணை நடாத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அம்பலப்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணை அறிக்கையின் உண்மைகள் வெளிப்படுத்தப்படும் என அரசாங்கம் அஞ்சுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தண்டனை விதிக்கும் அதிகாரமும் உண்டு எனவும், இந்த அறிக்கையின் பிரகாரம் சட்ட மா அதிபர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாறாக ஜனாதிபதியிடம் அறிக்கையை ஒப்படைத்துவிட்டு அமைதி காப்பதில் பயனில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நீதிபதிகள் உள்ளிட்ட நிபுணர்களினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கையை சாதாரண தரம் சித்தி எய்தாதவர்கள் எவ்வாறு ஆய்வு செய்ய முடியும் என கர்தினால் கேள்வி எழுப்பியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய சகல விடயங்களையும் வெளிப்படுத்த வேண்டும் எனவும் அரசாங்கம் இந்த விவகாரத்தில் மெத்தனப்; போக்கை பின்பற்றுவது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சர்வதேச கத்தோலிக்க திருச்சபைகளின் ஊடாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க பின் நிற்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




