தமிழர் திருநாளில் றீ(ச்)ஷாவில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் சிறப்பு நிகழ்வு (Video)
தைத்திருநாளாம் தமிழர் பெருநாளில் கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் பல்வேறுப்பட்ட தமிழர் பாரம்பரிய மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் பலவும் கடந்த 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தன.
இவற்றில் பலரையும் கவர்ந்த மாபெரும் கோலப்போட்டியும் அதன் பரிசளிப்பு நிகழ்வும் பலராலும் பேசப்படும் ஓர் நிகழ்வாக மாறியிருக்கிறது.
பண்னைக்கு விருந்தினர்களாக வருகை தந்திருந்த ஆண், பெண் என இருபாலாரும் இந்த கோலப்போட்டியில் பங்கு பற்றியதோடு வழங்கப்பட்ட கருப்பொருளை தாங்கிய கோலங்களும் அவர்களால் படைக்கப்பட்டன.
இவற்றில் முதலாம் இடத்தினை யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வி.சாரங்கி கனகலிங்கம் மற்றும் செல்வி.சங்கவி கனகதாசன் ஆகிய இரு பல்கலைக்கழக மற்றும் கல்வியற் கல்லூரி மாணவிகள் பெற்றுக்கொண்டதோடு தங்க சங்கிலியையும் தனதாக்கிக்கொண்டனர்.
இவர்கள் தங்கள் கோலம்பற்றி கூறுகையில் "தமிழின் முதல் பண்டிகையை உயிர் எழுத்தின் தொடக்கமான "அ" பிரதிபலிக்க, நம்மவர் உயிர் வாழ்வதிற்கு ஆதாரமாயுள்ள விவசாயத்தை "ஏர்" உணர்த்தி நிற்க, அதைப் போற்றும் வகையில் றீ(ச்)ஷா வினால் ஒழுங்கு செய்யப்பட்ட பொங்கல் விழாவை "பொங்கல் பானை" மற்றும் "றீ(ச்)ஷா" வின் சின்னத்தினூடாக பிரதிபலித்தோம் வெற்றி பெற்றோம்!" என தெரிவித்துள்ளனர்.





