தமிழர் தாயகங்களில் களை கட்டிய பொங்கல் வியாபாரம்
தமிழர்களின் பெருநாளான தை திருநாளினையும் உழவர் அறுவடை நாளினையும் கொண்டாட மலையக மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
டிட்வா சுறாவளியால் பெரும் பாதிப்புக்கு உள்ளான நிலையில் தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற எமது முன்னோர்களின் நம்பிக்கையினை தலையாய கடமையாக கொண்டு மலையகத்தில் வாழும் மக்கள் தமிழர்களின் பெருநாளான தை திருநாளினையும் உழவர் அறுவடை நாளினையும் கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.
மலையக நகரங்கள்
இதற்காக மலையக நகரங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூடியிருந்தனர்.
இந் நிலையில் ஹட்டன் நகரில் கூடிய மக்கள் சமயத்திற்கு முன்னிரிமையளித்து பூசைக்கு தேவையான பூஜை பொருட்களையும் பொங்கல் வைப்பதற்கு தேவையான புதுப்பானை பழங்கள் பாலை கரும்பு மஞ்சள் உள்ளிட்டவைகளையும் அத்தியவசிய பொருட்களையும் வாங்கி செல்வதனை காணக்கூடியதாக இருந்தது.
இதனால் ஹட்டன் நகரத்தில் இன்றைய தினம் வர்த்தக நடவடிக்கைகள் சூடுபிடித்திருந்ததுடன் மக்கள் அதிகமாக வருகை தந்ததனால் நடைபாதைகளில் நெரிசல் நிலையும் காணப்பட்டன.
டிட்வா சூறாவளி
தோட்டப்பகுதியில் உள்ள பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மலையக நகரங்களை நோக்கி படையெடுப்பதனால் ஹட்டன் டிப்போவினால் விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் ஏற்படுத்த பட்டுள்ளன.
எது எவ்வாறான போதிலும் டிட்வா சூறாவளி காரணமாக மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இன்னும் பல குடும்பங்கள் தங்களது சொந்த வீடுகளுக்கு செல்ல முடியாது இடைத்தங்கல் முகாம்களில் பொங்கலினை கொண்டாட முடியாது இருப்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதே.
ஹட்டன் டிக்கோயா நகரசபையினால் நடைபாதை வர்த்தக நிலையங்கள் இன்று அகற்றப்பட்டன.
ஹட்டன்
தைப்பொங்கல் திருநாளினை முன்னிட்டு ஹட்டன் நகர சபைக்குட்பட்ட ஹட்டன் நகரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வர்த்தகர்களுக்கு ஹட்டன் நகர சபை அதிகாரிகளினால் தங்களது வர்த்தக பொருட்களை நடைபாதையிலிருந்து அகற்றுமாறு இன்று 14 திகதி பணிப்புரை விடுத்தனர்.
அதனை தொடர்ந்து நடைபாதையில் பழங்கள் கரும்பு,மஞ்சல் தேங்காய் மரகறிகள் விற்பனை ஈடுபட்டிருந்தவர்கள் நகர சபையில் நடைபாதை விற்பனை தடைசெய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இந்த தீர்மானங்களுக்கு எதிராக செயப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் வர்தகர்களுக்கு தெரிவித்ததனையடுத்து தங்களது வர்த்த நடவடிக்கைகளை அகற்றிக்கொண்டனர்.
இதனால் நடைபாதை வர்த்தகர்கள் செய்வதறியாது திகைத்து நின்றிருந்தனையும் காணக்கூடியதாக இருந்தன.
வவுனியா
உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது.
வியாழக்கிழமை உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில் தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற வாக்கிற்கிணங்க தைப்பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடவுள்ளனர்.

வவுனியா நகரப்பகுதியில் அதிக சன நெரிசல் காணப்படுவதுடன் பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றின் விற்பனை சூடு பிடித்துள்ளது.
தைப்பொங்கல் திருநாள் வியாழக்கிழமை (15.01) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் தைப்பொங்கல் பண்டிகை களைக்கட்ட ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

அத்துடன் கடந்த வருடத்தினை விட இம்முறை மக்கள் அதிக ஆர்வத்துடன் பொங்கல் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக வவுனியா வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

மேலதிக தகவல்- திலீபன்
மட்டக்களப்பு
தைத்திருநாளை முன்னிட்டு மட்டக்களப்பு நகருக்கு மக்கள் வருகைதந்து தைத்திருநாளுக்கான பொருட்கொள்வனவில் ஈடுபட்டுவருவதை காணமுடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவும் நிலையில் மட்டக்களப்பு பொதுச்சந்தை மற்றும் மட்டக்களப்பு நகருக்கு அதிகளவான மக்கள் வருகைதந்து பொருட்கொள்வனவில் ஈடுபட்டுவதை காணமுடிகின்றது.

பொங்களுக்குரிய பொருட்கொள்வனவிலும் புத்தாடைக்கொள்வனவிலும் மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டிவருவதை காணமுடிந்தது.
மட்டக்களப்பு நகருக்கு அதிகளவான மக்கள் வருகையினையொட்டி மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு பிரதேசசத்திலிருந்தும் அதிகளவான மக்கள் வருகைதருவதன் காரணமாக மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபையினால் விசேட போக்குவரத்துகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலதிக தகவல்- குமார்