புலம்பெயர் முன்னணித் தமிழ் தொழிலதிபருக்கு புலனாய்வுத் துறையால் நெருக்கடி! முதலீட்டாளர்கள் அச்சம்
புதிய இணைப்பு
சர்வதேச தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருப்பது முதலீட்டாளர்களிடையே அச்சத்தை தோற்றுவிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில், இலங்கை அரசாங்கம் புலம்பெயர்ந்து இருக்கும் முதலீட்டாளர்களை இலங்கைக்கு வருமாறும் முதலீடு செய்யுமாறும் அழைப்பு விடுத்திருக்கின்றது.
இப்படியான சூழலில், புலம்பெயர் நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து முதலீடு செய்யும் தொழிலதிபர்களையும் அவர்களது ஊழியர்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கும் வகையில் புலனாய்வாளர்களின் செயற்பாடு இருப்பதன் காரணமாக இலங்கையில் முதலீடு செய்ய எதிர்பார்க்கும் புலம்பெயர் தொழிலதிபர்கள் தயக்கம் காட்டக் கூடும் என்று குறிப்பிடப்படுகின்றது.
புலனாய்வாளர்கள் மற்றும் அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடு புலம்பெயர் நாடுகளில் உள்ள, குறிப்பாக ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாட்டில் இருந்து இலங்கையில் முதலீடு செய்ய இருப்பவர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
பிரபல சர்வதேச தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த அழைப்பு தொடர்பான அறிவிப்பு இன்றைய தினம் (23.02.2023) வழங்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக்கான அழைப்பை கிளிநொச்சி, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் விடுத்துள்ளனர்.
வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக அழைப்புச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி அவரை நாளைய தினம் (24.02.2023) காலை ஒன்பது மணிக்கு பூநகரி வீதி, குமரபுரம் - பரந்தனில் இருக்கும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

