கல்முனை மாநகரசபைக்கு உட்பட்ட பல்வேறு
வீதிகளில் உள்ள அனுமதியற்ற வியாபார கொட்டில்கள் பாதை இரு மருங்குகளில்
அமைந்துள்ள தற்காலிக கடைகள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வீதியில்
வைத்துள்ள விளம்பர விற்பனை பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த நடவடிக்கையின் போது நற்பிட்டிமுனை, தாளவெட்டுவான்
சந்தி, கல்முனை மாநகர பகுதி உள்ளடங்கலாக பாதுகாப்பற்ற முறையில்
வீதியில் வைத்துள்ள விளம்பர விற்பனை பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
வழங்கப்பட்டுள்ள அறிவித்தல்
கல்முனை
மாநகரசபைக்கு உட்பட்ட பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து மற்றும்
பாதசாரிகளின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படுவதால் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு கல்முனை
பொலிஸார் பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ளுமாறு அறிவித்தல்
விடுத்துள்ளனர்.
வியாபார பொருட்கள் மற்றும் வியாபார தளங்களின் விளம்பர பலகைகளை
வீதிகளில் வைத்தல், வாகனங்களை நீண்ட நேரமாக வீதிகளில் நிறுத்தி வைத்தலும்
மற்றும் திருத்த வேலை செய்தலும், உணவுப் பொருட்களையும் மற்றும் பழ வகைகளையும்
பாதுகாப்பற்ற முறையிலும் திறந்த நிலையிலும் விற்பனை செய்தல், கால் நடைகளை
பாதுகாப்பற்ற நிலையில் வீதிகளில் நடமாடவிடல், கழிவு நீரை வீதிகளில் விடுதல்
போன்ற இவ்வாறான குற்றச்செயல்களை தொடர்ச்சியாக செய்து வருவதால் மக்கள்
பலவகையான சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.
கோரிக்கை
ஆகையால் இவ்வாறான செயற்பாடுகளில்
இருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் பொதுமக்கள் சிரமங்கள் அசௌகரியங்களிலிருந்தும்
பயணிப்பதற்கு உதவுமாறு வியாபாரிகளாகிய உங்களை கேட்டுக் கொள்கின்றேன் என
கல்முனை தலைமையக பொலிஸ் மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியும்
பிரதான பொலிஸ் பரிசோதகருமான பி.ரி நஸீர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகரித்து வரும்
வீதி விபத்துக்களால் ஏற்படும் மரணத்தை தவிர்க்கும் முகமாக இவ்வாறான
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க
முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மேற்படி நடவடிக்கையானது கல்முனை
பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் ஆலோசனைக்கமைய
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி
வழிகாட்டலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் வீதி அபிவிருத்தி அதிகார
சபையின் உயரதிகாரிகள் கல்முனை மாநகர சபையின் வருமான வரி அதிகாரிகள் என பலரும்
கலந்து கொண்டனர்.













