நாட்டின் கல்வியையும் ஜனாதிபதி அழிக்கப் போகிறாரா? பகிரங்க கேள்வி
கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமானது கல்வியை தனியார் மயமாக்கும் சட்டமாகும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், நேற்று (10) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரச பல்கலைக்கழகங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்துக்கள் தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விவேகமற்ற கொள்கைத் தீர்மானங்களினால் நாட்டின் விவசாயத்தை அழித்ததைப் போன்று நாட்டின் கல்வியையும் ஜனாதிபதி அழிக்கப் போகின்றாரா என்ற நியாயமான சந்தேகம் நிலவுவதாக இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க கூறுகையில், மூன்று அமைச்சர்கள் இருந்த போதிலும் கல்வி முறைமை பிரச்சினைகளால் நிரம்பி வழிகிறது.
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் கல்வியை புறக்கணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டிலுள்ள பெரும்பான்மையான பல்கலைக்கழகங்கள் இலாப நோக்கத்திற்காக இயங்கும் நிறுவனங்கள் அல்ல என சுட்டிக்காட்டிய ஜயசிங்க, உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் இலாபம் ஈட்டும் நோக்கமின்றி இயங்கும் தனியார் பல்கலைக்கழகங்களாக இருந்தாலும், இலங்கையில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் இலாபம் ஈட்ட முயற்சிக்கும் நிறுவனங்களாகவே இருக்கின்றன.
கல்வியை தனியார்மயமாக்குவது சாத்தியமாக இருந்தாலும், தகுதி, திறன் மற்றும் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டின் குழந்தைகளுக்கு உயர் கல்விக்கான உத்தரவாதமாக அரசின் முன்னுரிமை இருக்க வேண்டும் என இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.