பாடசாலை மாணவர்களை தண்டிப்பது தொடர்பில் ஆசிரியர்களுக்கு எச்சரி்க்கை
பாடசாலை மாணவர்களை தண்டனைக்குட்படுத்தும் அதிபர், ஆசிரியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தண்டனை என்ற பெயரில் பாடசாலை மாணவர்கள் மீதான துன்புறுத்தல்கள் அதிகரித்து
வரும் நிலையிலேயே அவர் இவ்வாறு அறிவி்த்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
" 'எழுத்தறிவித்தவன் இறைவன்' எனும் கூற்றுக்கமைய, இறைவனாக போற்றப்படக்கூடிய ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் துன்பம் இழைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.
கடும் நடவடிக்கை
கற்றலில் சிக்கல்களை எதிர்நோக்கும் மாணவர்களை எவ்வாறு கற்றலில் ஈடுபடச் செய்வது என்ற யுக்தியை கண்டறிந்து அவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
அதற்காகவே ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டு, அரசினால் ஆசிரிய நியமனம் வழங்கப்படுவதோடு, மாதாந்த கொடுப்பனவும் வழங்கப்படுகிறது.
எனினும், ஒருசில ஆசிரியர்கள் மாணவர்களின் நிலையை அறியாது அவர்களை அடித்து துன்புறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.ஆகவே, தற்போது பதிவாகியுள்ள இந்த சம்பவங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்க பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும் தங்களின் பொறுப்புக்களை உணர்ந்து கடமைகளை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறின்றி பொறுப்பற்ற வகையில் செயற்படும் அதிபர், ஆசிரியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத்தருகின்றோம்." என வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |