யாழ். மாணவனின் முயற்சி: ஆசிரியர்கள் கவனமெடுக்காதது ஏன்!
இம்முறை க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் விழிப்புடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாடப் புத்தகங்களில் தவறாக உள்ள விடயங்களை இம்முறை பரீட்சைக்கு எதிர்பார்க்கை வினாவாக முன் வைத்து வடக்கிலும் கிழக்கிலும் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு உள்ளனர்.
பல பாடசாலைகளிலும் தனியார் கல்வி நிலையங்களிலும் மாணவர்கள் இவ்வாறு தயார்ப்டுத்தப்பட்டு வருவது வருத்தமளிப்பதாக மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாடப் புத்தகங்களில் தவறாக உள்ள பரப்புக்களில் இருந்து பரீட்சைக்கு வினாக்கள் தேர்ந்தெடுக்கப்படாத போக்கு கடந்த கால பரீட்சைகளில் அவதானிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞான பாட ஆசிரியர் ஒருவர் சுட்டிக்காட்டுகின்றார்.
தரம் 10 அலகு 8 இல் உள்ள தவறான பரிசோதனை
தற்போது இலங்கையில் நடைமுறையில் இருக்கும் பாடத்திட்டத்தில் தரம் 10 இல் அலகு 8 இல் வளர்ச்சி என்ற தலைப்பின் கீழ் முன் வைக்கப்பட்டுள்ள பரிசோதனை தவறு என யாழ் மாணவன் ஒருவரால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
இம் முறை க.பொ.த (சா/த) பரீட்சையை எழுதவுள்ள இந்த மாணவன் தன்னுடைய பரிசோதனை முடிவுகள் தொடர்பில் குழப்பமடைந்திருந்ததாக குறிப்பிடுகின்றார்.
தாவரம் ஒன்றின் வளர்ச்சி வரையறையற்றதாக இருக்கும்.ஒவ்வொரு தாவரமும் இறக்கும் வரை வளரக்கூடியது. இனத்துக்கு ஏற்ப தாவரத்தின் வயதுகள் வேறுபட்டாலும் அவை இறக்கும் வரை வளர்ச்சியைக் காட்டக் கூடியன.
தரம் 10 இல் விபரிக்கப்பட்ட வளர்ச்சி மானிப் பரிசோதனை, தாவரங்கள் வளரும் என்பதை மாணவர்களுக்கு எடுத்துரைப்பதற்காக முன்வைக்கப்பட்ட போதும் அதன் முடிவுகள் தாவரங்களின் வளர்ச்சி பற்றிய சாதாரண அவதானங்களை பொய்யாக்குவதாக உள்ளதாக அம் மாணவன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியருடனான உரையாடல்
வளர்ச்சி மானிப் பரிசோதனை கடந்த மூன்றாண்டுகளாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பல இடங்களிலும் எதிர்பார்க்கை வினாவாக கற்பிக்கப்பட்டுள்ளது.
இம்முறையும் இது அவ்வோறே தொடர்கிறது. இம்முறை விஞ்ஞான பாடத்தில் பரீட்சைக்கு வரக்கூடிய வினாக்கள் என ஆசிரியர்கள் சிலரால் முன் வைக்கப்படும் வினாத் தொகுதியில் வளர்ச்சி மானிப் பரிசோதனை முதலிடம் பிடித்துள்ளது.
இவ்வாறு எதிர்பார்ப்பு வினாவாக வளர்ச்சி மானிப் பரிசோதனையை முன் வைத்த ஆசிரியர் ஒருவருடன் மாணவன் தன் பரிசோதனை முடிவுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
அது பின்வருமாறு இருந்தது.
மாணவன் ஆசிரியரின் புலன (what's app number) இலக்கத்திற்கு வினாத்தாளை அனுப்பி வைத்துள்ளார். அதனூடாக குறுஞ்செய்திகளாக தன் உரையாடலை அவர் முன்னெடுத்திருந்தார்.
யாழ் மாணவர்:- இதிலுள்ள முதலாவது வினா பற்றியது. (2.A வினா)..... தாவரத்தின் வளர்ச்சியை அவதானிப்பற்கு இந்த உபகரணம் பொருத்தமானதா? இந்த முறை எதிர்பார்ப்பு வினாவாக இது சொல்லித் தருகின்றனரே!
ஆசிரியர்:- பொருத்தமானதுதான் . என்ன பிரச்சினை. 'Grade 10 Part 1 book' பாருங்கள்.
யாழ் மாணவன்:- தாவரத்தின் நுனியில் கட்டிய நூல் தாவரம் வளரும் போது உயரும். நூலில் இழுவையை நூலின் மறுமுனையில் உள்ள திணிவு ஏற்படுத்தும். இதனால், தாவரத்தின் வளர்ச்சியின் போது அது உயர்வதை காட்டி காட்டும்.
ஆனாலும் தாவரம் வளரும் போது தாவரத்தில் கட்டிய நூல் அப்படியே இருக்க புதிய அரும்பு அதற்கு மேலாக தோன்றி வளர்ந்து உயருகிறதே!
நான் கொய்யா நாற்றிலும் பயிற்றம் கொடி, செவ்வந்தி ஆகிய தாவரங்களில் செய்து பார்த்தேன்.
நிலத்தில் இருந்து 30 cm உயரத்தில் தாவரத்தின் நுனி இருந்த போது பரிசோதனையின் படி கட்டிப் பார்த்தேன்.
தாவரம் 50 cm உயரும் வரை தொகுதியை பேணியிருந்தேன்.
கட்டிய நூலில் உயரம் சிறிதளவாக 5 cm பயிற்றையிலும், 2 cm கொய்யாவிலும், 1.5 cm செவ்வந்தியிலும் உயர்ந்திருந்தது.
ஆனாலும் தாவரத்தின் உயரம் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இது எப்படி என எனக்கு விளங்கவில்லை.அதனால் தான் கேட்டிருந்தேன் சேர்.
ஆசிரியர்:- வெரி குட் (Very good) யோசிக்க வேண்டிய விசயம்தான்.
ஆனாலும் சில எடுகோள்கள் எடுக்க சொல்லுவார்கள். பரிசோதனை வழுக்கள் கேட்பார்கள். நீங்கள் சொல்வது இதற்குள் அடங்கும் போல.
உங்கள் கருத்து சரி.
என ஆசிரியருடனான உரையாடல் அமைந்திருந்தாக அவர் குறிப்பிட்டிருந்தது இங்கே நோக்கத்தக்கது.
இதுவரை தவறு சுட்டிக் காட்டப்படவில்லை
பல பாடசாலைகளின் விஞ்ஞான பாட ஆசிரியர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடிய போது பாடப் புத்தகத்தில் உள்ளபடியே படிப்பித்தால் போதும் என்ற பொறுப்புணர்சியற்ற பதிலையே பெற முடிந்ததும் இங்கே நோக்கத்தக்கது.
பரிசோதனைகளை பாடசாலைகளில் செய்து காட்டி அதனூடாக மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுவதில்லை என்பதற்கு இந்த பரிசோதனையும் ஒரு சான்றாக அமைந்து விடுகின்றது.
பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தால் தவறுகளை அறிந்திருக்க முடியும்.2016 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கும் இந்த தவறான பரிசோதனை பற்றி இதுவரை இலங்கையின் கல்வியமைச்சும் திருத்தங்களை செய்வது தொடர்பில் கவனமெடுக்காதது ஆச்சரியமானதாக இருப்பதாக உளவளத்துணை ஆலோசகர் ஒருவர் இது தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமையும் குறிப்பிட்டார்.
மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்.
2016ஆம் ஆண்டு முதல் வளர்ச்சி மானிப் பரிசோதனை க.பொ.த(சா/த) விஞ்ஞான பாடப் பரீட்சைகளில் விடையளிக்குமாறு கேட்கப்படவில்லை.
இந்த அடிப்படையில் தான் இது கடந்த மூன்றாண்டுகளாக எதிர்பார்க்கை வினாவாக முன்வைக்கப்பட்டு வருவதனை அவதானிக்கலாம்.
இம்முறையும் இந்த வளர்ச்சி மானிப் பரிசோதனை பரீட்சை நோக்கில் கேட்கப்படாது என்பது நிச்சயம்.
மாறாக பரீட்சையின் போதும் விடையளிக்குமாறு கேட்கப்பட்டால் இந்த வினாவினை தெரிவு செய்யும் அத்தனை மாணவர்களுக்கும் திறந்த புள்ளியிடல் அடிப்படையில் முழுமையான புள்ளிகளையும் வழங்கும் நிலை பரீட்சைத் திணைக்களத்திற்கு வரும் என ஓய்வு பெற்ற விஞ்ஞான விரிவுரையாளர் ஒருவர் இது தொடர்பில் மேற்கொண்டிருந்த கலந்துரையாடலின் போது குறிப்பிட்டிருந்தார்.
தாவரம் எப்படி வளரும்
தாவரம் உச்சி வளர்ச்சி மற்றும் சுற்று வளர்சியை கொண்ட ஒரு உயிரினக் கூட்டமாகும்.
வேர் நுனி மற்றும் அரும்புகள் தான் தாவரத்தின் உச்சிகள். இவற்றில் உள்ள பிரியிழையங்களால் உற்பத்தி செய்யப்படும் புதிய கலங்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்படுவதால் நீள அதிகரிப்பை காட்டுகின்றன. இது தாவரங்களின் நீளத்தை (உயரத்தை) அதிகரிக்கும்.
இது சுவர் ஒன்றின் மீது வைக்கப்படும் கல் வரிசைகள் போன்றது. கல் வரிசை கூடும் போது சுவரின் உயரமும் கூடிச் செல்லும் என்பது போன்றதாகும்.
தாவர உடலைச் சூழவுள்ள பக்கப் பிரியிழையம் தாவரத்தினை பக்கவாட்டாக சூழ்ந்திருக்கும்.
இது உருவாக்கும் புதிய கலங்களை பக்கம் பக்கமாக நிலத்திற்கு கிடையாக இருக்குமாறு அடுக்கும். இதனால் தாவரத்தின் சுற்றுப் பருமன் கூடி தண்டு, வேர் சுற்றளவில் பருக்கும் என உயர்தர உயிரில் பாட ஆசிரியர் ஒருவருடன் மேற்கொண்ட தாவர வளர்ச்சியின் கோலம் தொடர்பிலான உரையாடலின் போது அவர் குறிப்பிட்டிருந்தார்.
தாவரங்கள் நீளத்தில் அதிகரிப்பை ஏற்படுத்துவதில் பொதுவான இயல்பை கொண்டுள்ள போதும் சுற்றளவு வளர்ச்சியில் இனத்துக்கு இனம் வேறுபடும் எனவும் சுட்டியிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |