வெளிநாட்டிலிருந்து வந்த பொலிஸ் அதிகாரிக்கு கொழும்பில் அதிர்ச்சி கொடுத்த நபர்
இலங்கைக்கு வருகை தந்த ஓய்வு பெற்ற குவைத் பொலிஸ் அதிகாரியிடமிருந்து சுமார் 1.3 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் அடங்கிய பையைத் திருடிய வாகன சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருட்டுச் சம்பவம் இடம்பெற்று 12 நாட்களின் பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
42 வயதான சந்தேக நபரிடம் திருடப்பட்ட 2,000 அமெரிக்க டொலர்கள், 112 குவைத் தினார், வங்கி அட்டைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
பொலிஸாரிடம் முறைப்பாடு
கடந்த மாதம் 26 ஆம் திகதி இலங்கை வந்த ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சொகுசு வாடகை காரில் சென்றுள்ளார்.

ஹோட்டலுக்கு வந்த சிறிது நேரத்திலேயே, காரில் தனது சிறிய பையை தவறவிடப்பட்டதை உணர்ந்துள்ளார். இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸார் முதலில் ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர், அதில் அந்த அதிகாரி தனது துணிப் பையை மட்டும் எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குள் நுழைந்தமை தெரிய வந்துள்ளது.
குறித்த வாகன சாரதியிடம் விசாரணை மேற்கொண்ட போதும், அவர் அதனை மறுத்துள்ளார். இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்ய புலனாய்வுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
சாரதி கைது
மேலும் அந்த அதிகாரி இரண்டு பைகளுடன் வாகனத்தில் ஏறுவது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளதால், சாரதியை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீண்ட விசாரணையின் போது, சாரதி பையை தன்னிடம் வைத்திருந்ததாக ஒப்புக்கொண்டார், மேலும் அதில் இருந்த 500 டொலர்களை நீர்கொழும்பில் உள்ள ஒரு பணப் பரிமாற்ற மையத்தில் மாற்றி 155,000 ரூபாயை பெற்றதாகக் கூறினார்.
அதற்கமைய, திவுலபிட்டிய பகுதியில் உள்ள அவரது வீட்டில் பையை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.