வவுனியா வடக்கு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி
வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் திருநாவுக்கரசு கிருஸ்ணவேணி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் விநாயகமூர்த்தி சஞ்சுதன் உபதவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா வடக்கு பிரதேச சபைக்கான தவிசாளர், உபதவிசாளர் தெரிவுகள் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி தலைமையில், சபையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று (27.05) மாலை நடைபெற்றது.
இதன்போது தவிசாளர் ஒருவரை பிரேரிக்குமாறு கோரப்பட்ட நிலையில் தமிழரசுக் கட்சி சார்பில் தி.கிருஸ்ணவேணி பிரேரிக்கப்பட்டார். தேசிய மக்கள் சக்தி சார்பில் ஞானமுத்து அகிலன் பிரேரிக்கப்பட்டார். தவிசாளராக இருவரது பெயர்கள் பிரேரிக்கப்பட்டமையால் வாக்கெடுப்பின் மூலம் அதனை தெரிவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்தவகையில் வாக்கெடுப்பை இரகசியமாகவா, அல்லது பகிரங்கமாக நடத்துவது என ஆணையாளரால் கோரப்பட்டது இதன்போது தெரிவுகளை இரகசியமாக நடத்துமாறு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர். அல்லது இரகசிய வாக்கெடுப்பா அல்லது பகிரங்க வாக்கெடுப்பா என்பதை இரகசிய வாக்கெடுப்பின் மூலம் கோருமாறு கேட்டனர்.

அதற்கு ஆணையாளர் மறுப்பு தெரிவித்த நிலையில் தேசிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சியின் இரு உறுப்பினர்கள் என 8 பேர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தனர். சபையில் மீதம் 15 உறுப்பினர்கள் இருந்த நிலையில் அவர்கள் அனைவரும் தெரிவுகளை பகிரங்கமாக நடத்துமாறு வாக்களித்திருந்தனர். பெரும்பானடமை வாக்குகளின் அடிப்படையில் தவிசாளர் தெரிவு பகிரங்கமாக நடத்தப்பட்டது.
அந்தவகையில் தவிசாளராக பெயர் பிரேரிக்கப்பட்ட கிருஸ்ணவேணிக்கு 15 வாக்குகள் ஆதரவாக கிடைக்கப்பெற்றது. அவருக்கு தமிழரசுக் கட்சியின் 5 வாக்குகளும், சங்கு கூட்டணியின் 3 வாக்குகளும், ஐக்கிய மக்கள் சக்தியின் 2 வாக்குகளும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்சின் 4 வாக்குகளும், சர்வஜன அதிகாரத்தின் ஒரு வாக்குமாக 15 வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட்டது.
வெற்றி பெறுவதற்கு 12 உறுப்பினர்களின் ஆதரவு போதுமான நிலையில் 15 வாக்குகள் கிடைக்கப்பெற்ற கிருஸ்ணவேணி புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இதனையடுத்து உப தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது. உப தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரசின் உறுப்பினர் விநாயகமூர்த்தி சஞ்சுதனின் பெயர் பிரேரிக்கப்பட்டது. உப தவிசாளராக வேறு நபர்களின் பெயர்கள் பிரேரிக்கப்படாத நிலையில் சஞ்சுதன் போட்டியின்றி உபதவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.


கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan