தமிழ் கட்சிகளின் கூட்டணிக்கு பின் சூழ்ச்சி - மா.சத்திவேல் குற்றச்சாட்டு
தமிழர்களின் பிரச்சனைக்காக கூட்டுணைக்கிறோம் என தமிழ் கட்சிகளில் ஒன்றிணைந்ததில் ஏதோவொரு சூழ்ச்சி இருப்பதாக தோன்றுகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
இன்று (17.07.2026) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கான புதிய கூட்டணி
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
அண்மையில் வடக்குக் கிழக்கு மற்றும் மலையகம் சார்ந்த ஆறு கட்சிகளின் கூட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளுக்கு கூட்டாக குரல் கொடுத்து செயல்படுவதே என கூட்டுக் கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழர்கள் முகம் கொடுக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நீங்கள் எந்தெந்த பேரினவாத கட்சிகளோடு சேர்ந்து ஆட்சி அமைத்தீர்களோ, அவர்களே காரணம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

இந்த நிலையில் தமிழ் மக்களுக்காக புதிய கூட்டு அமைப்பது என்பது கேலிக்கூத்து என்பதே மக்கள் அபிப்பிராயம். தமிழர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணம் ஒற்றை ஆட்சி அரசியல் யாப்பும் சிங்கள பௌத்த பேரினவாதமே என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.
அரசியல் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை முன்வைப்பதற்காக தமிழ் சட்டத்தரணிகளும் சிவில் சமூக அமைப்புகளும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தலைமையிலான கட்சியும் கூட்டாக சேர்ந்து கலந்துரையாடல்களை நடத்திக் கொண்டிருக்கையில் அவர்களோடு இணைய வேண்டிய நீங்கள் புதிதாக கூட்டமைப்பது நரித்தந்திர அரசியலாகவே காணப்படுகின்றது.
கறுப்பு ஜூலையை நினைவு கூறும் மாதத்தில் உங்கள் கூட்டை ஆரம்பித்துள்ளீர்கள். 1983ஆம் ஆண்டின் தமிழர் இன அழிப்பானது சிங்கள பௌத்தத்தின் கோர முகத்தினை உலகிற்கு காட்டியது.
செம்மணி மனிதப் புதைகுழி
இனப்படுகொலை யுத்தம் நடந்த போது நீங்கள் யாரோடு நின்றீர்கள் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். தற்போது செம்மணி மனித புதைகுழி நடவடிக்கைகளிலும் கூட உங்கள் முகங்களை நாங்கள் காணவில்லை.
இராணுவப் படையினரும் தொல்லியல் திணக்களமும் கடந்த காலங்களில் மட்டுமல்ல நிகழ்காலத்திலும் மக்களின் காணிகளை கைப்பற்றுவதற்காக எடுக்கின்ற முயற்சிகளின் போது நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்றே தெரியாமல் உள்ளது. இதனைப் பார்க்கும் போது இதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருப்பதாகவே தோன்றுகின்றது.

வடக்குக் கிழக்கு தமிழர்களின் தாயகம் சார்ந்த அரசியல் பிரச்சனை, மலையக தமிழர்களின் பிரச்சினை மற்றும் முஸ்லிம்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகள் இவை ஒவ்வொன்றும் தனித்துவமானவை.
அதற்கான அரசியல் கொள்கை விளக்கம் மற்றும் நடைமுறை சார்ந்த செயற்பாடுகளை புதிய கூட்டமைப்பு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அது தொடர்பான இணக்கப்பாட்டிலேயே கூட்டு உருவாக்கப்பட வேண்டும்.
அதுவும் வாக்களித்த மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிகழ்ந்தலே சாலச் சிறந்தது. ஆனால் மக்களுக்கு தூரமாக நட்சத்திர ஹோட்டல்களில் நிகழ்வது மக்களுக்கான கூட்டாக இருக்க முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.