சுவிற்சர்லாந்து பேர்ன் ஞானலிங்கேச்சுரத்தில் தமிழர் திருநாள் தைப்பொங்கல்
பேர்ன் நகரில் அமைந்துள்ள செந்தமிழ்த் திருமறை வழிபாட்டுத் திருக்கோவிலான ஞானலிங்கேச்சுரத்தில், தமிழர் திருநாள் தைப்பொங்கல் விழா 14.01.2026 புதன்கிழமை காலை 09.00 மணிமுதல் மிகு சிறப்புடனும் செந்தமிழ் இறையியல் பெருமையுடனும் நடைபெற்றது.
சுவிற்சர்லாந்து கூட்டாட்சி நடுவனரசுச் செயலகத்தின் பதில் தலைவர் றெகுலா மாதெர், பேர்ன் மாநில சமய மற்றும் தேவாலயத் துறைசார் இயக்குநர் திருநிறை தாவித் லொயிற்வில்லர், பல்சமய ஆற்றுப்படுத்தல் மன்றத்தின் தலைவர் றெகுலா தொம்மென், பேர்ன் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பேர்ன் மாநகர மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள், தொழிலிசைவாக்கத் துறைசார் அதிகாரிகள் உட்பட 30 இற்கும் மேற்பட்ட சுவிற்சர்லாந்து நாட்டவர்கள் இப்பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
பொங்கல் விழா
மேலும் இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஞானலிங்கேச்சுரத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு வருகை அளித்திருந்தனர்.
விழாவின் தொடக்கமாக, ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரருக்கும், திருக்கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அனைத்துத் தெய்வங்களுக்கும் செந்தமிழில் சீர்மிகு வழிபாடுகள் நடைபெற்றன.

கருவறையில் தெய்வத்தமிழில் ஒலித்த திருமறை ஓசைகள் பக்தர்களின் உள்ளங்களை நெகிழச் செய்தன. வருகை அளித்திருந்த சுவிற்சர்லாந்து அரச சார்பாளர்கள், மாநில அதிகாரிகள் உட்பட சிறப்பு விருந்தினர்கள் “பொங்கலோ பொங்கல்” எனக் குலவையிட்டு, பானைக்குள் தமிழ் மரபுமுறையில் அரசியிட்டு பொங்கினர்.
முற்றத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில், நண்பகல் 12.00 மணிக்கு அவிரொளிக் கதிரவன் ஞாயிறு பெருமானுக்குப் பொங்கல் படைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அருளமுது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து சுவிஸ் அரச அதிகாரிகள், சமூகத் தலைவர்கள், சுவிற்சர்லாந்து நாட்டுச் சான்றோர் மற்றும் பெருந்திரளான தமிழ் மக்கள் கலந்து கொண்டு தமிழர் திருநாளைச் சிறப்பித்ததுடன், தாம் இவ்விழாவில் பங்கேற்றமை தமக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக உளநிறைவுடன் தெரிவித்தனர்.
தமிழ் மக்கள்
சைவநெறிக்கூடத்தின் சார்பில் விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து மதிப்பளிப்பு வழங்கப்பட்டது.
விருந்தினர் அனைவரையும் வரவேற்று சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் ஐயா நன்றி நின்றார். சுவிற்சர்லாந்து அரசிற்கும் மாநில அரசிற்கும் தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து அளிக்கும் உரிமைக்கும் நன்றி நவின்றார். மதப்பளிப்பாக பூமாலைகள் அணிவக்கப்பட்டன.

பேர்ன் வள்ளுவன் பள்ளி ஆசிரியை திருமதி. நந்தினி முருகவேள் பெண் விருந்தினர்களுக்கு மாலை அணிவித்தார். சைவநெறிக்கூட இளையோர் மன்றத்தின் சார்பில் திருநிறை லாவண்யா இலக்ஸ்மணன் வரவேற்புரையினை யேர்மன் மொழியிலும் தமிழிலும் ஆற்றினார்.
அழைப்பினை ஏற்று வருகை அளித்த அனைவருக்கும் சைவநெறிக்கூடத்தின் பெயரால் நன்றியினைத் தெரிவித்தார். 14.01.2026 அன்று சைவநெறிக்கூடம், சுவிற்சர்லாந்து அரச அமைச்சர்களிடத்திலும், மாநில மற்றும் தேசிய சபைகளிடத்திலும் இலங்கை தொடர்பான வேண்டுகை (மனு) முன்வைக்க இருப்பது தொடர்பான தகவலையும் அவர் வழங்கினார்.
சுவிற்சர்லாந்து அரசு
பங்குனி 2026 இல் இலங்கைக்கும் சுவிற்சர்லாந்திற்கும் 70 ஆண்டு தூதரக உறவு நிறைவடைவதைச் சுவிற்சர்லாந்து அரசு கொண்டாடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இவ்வேளையில் சுவிற்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை சென்றால், அவர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்று தமிழ் மக்களின் இடர்நிலை தொடர்பில் நேரடியாக
அறிந்து கொள்ள முனைவது அவசியம் என்பதையும், சுவிற்சர்லாந்து வாழ் தமிழ் மக்களின் பெயரில் விடுக்கப்படும் வேண்டுகையையும் விளக்கினார். இம்மனு தொடர்பான விரிவான விளக்கம் பின்னர் சைவநெறிக்கூடத்தால் வெளிப்படுத்தப்படும் என்றும் உறுதிப்படுத்தினார்.

மாலை வேளையில் ஞானலிங்கேச்சுரத்தில் குழந்தைகளுக்கு தைப்பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன.
குழந்தைகளின் மகிழ்ச்சியும் உற்சாகமும் விழாவுக்கு மேலும் அழகு சேர்த்தன. அதனைத் தொடர்ந்து மாலை 16.30 மணிமுதல், மகரசங்கராந்தி நாளையொட்டி சுடரொளி கொடுநுகம் புகும் நிகழ்வாக ஞானலிங்கபாலன் மணிகண்டன் ஐயப்பனுக்கான சிறப்பு வழிபாடு பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
இதில் ஏராளமான அடியார்கள் பங்கெடுத்து திருவருள் பெற்றனர்.
தமிழ் மொழி, தமிழர் பண்பாடு இறையியல் மரபு ஆகியவற்றை வெளிநாட்டிலும் பேணிக் காக்கும் வகையில் நடைபெற்ற இந்த தைப்பொங்கல் விழா, “தமிழா வழிபடு, தமிழில் வழிபடு, தமிழ் வழிப்படு” என்ற மகுடத்துடன் நிறைவற்றது.



3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri