சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற சைவமும் தமிழும் பரிசளிப்பு விழா (Photos)
கடந்த 2020ம் ஆண்டு சைவமும் தமிழும் எனும் தலைப்பில் சைவநெறிக்கூடத்தால் சைவத்தமிழ்ப் போட்டிகள் சுவிற்சர்லாந்து நாடு முழுவதும் நடத்தப்பட்டிருந்தது.
தேவாரம், திருவாசகம், திருக்குறள், திருக்கதை, திருப்புகழ், திருப்புராணம், திருநிறம் தீட்டல் எனப் சுவிஸ் முழுவதும் ஏழு வகைப் போட்டிகள் 12 பிரிவுகளில் நடைபெற்று நிறைவடைந்து. பரிசளிப்பு நாள் அறிவிக்கப்பட்டிருந்த காலத்தில் மகுடநுண்ணிப் பெருந்தொற்று (கோவிட் - 19) காரணமாக பரிசளிப்பு 2 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
பரிசளிப்பு விழா
இந்நிலையில், நேற்று (26) சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்னில் அமைந்துள்ள அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் பெருமண்டபத்தில் பரிசளிப்பு நடைபெற்றது.
செந்தமிழ் வழிபாட்டுடன் நிகழ்வு 15.00 மணிக்கு தொடங்கப் பெற்றது. முருகருசி சிவலிங்கம் சுரேஸ்குமார், தமிழ் அருட்சுனையர் பயிலும் பிரியா மூர்த்தி ஆகியோர் தமிழ் வழிபாட்டினை ஆற்றி வைத்தனர்.
சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் நல்லாசி உரையினை வழங்கினார். "ஆண்டு தோறும் சைவநெறிக்கூடம் இப்போட்டியை தொடர்ந்து நடத்தும் நோக்கம், எம் தமிழ்ச் செல்வங்கள் சைவத் தமிழ் அருளாளர் நற்பாக்களை மனனம் செய்வதும், தமிழ்ப் பாக்களை நல் உச்சரிப்புடன் பாடுவதும் எமது நோக்கமாகும்.
மேலும் எம் தமிழ்ப் பிள்ளைகளை ஊக்குவிப்பதும் ஆகும் என விளக்கினார். இந்நிகழ்வில் பங்கெடுத்த அனைத்துப் பிள்ளைகளுக்கும் நிறை செல்வம், நீள் வாழ்நாள், பெருவெற்றி முழுமையாக கிடைக்க எல்லாம் வல்ல ஆடல் வல்லான் ஞானலிங்கர் அருள அருளாசிகள்”எனவும் ஆசியுரை வழங்கினார்.
முரளிதரன் கார்த்திகா சைவநெறிக்கூடத்தின் பெயரால் வரவேற்புரையினை வழங்கினார். "அனைத்துப் பிள்ளைகள், பெற்றோர், ஆசிரியர்கள், குருமார்கள், போட்டி ஏற்பாட்டாளர்கள் அனைவரையும் சைவநெறிக்கூடத்தின் பெயரால் வரவேற்றார்" பரிசளிப்பு முழு நிகழ்வினையும் இவர் தொடர்ந்து தொகுத்து வழங்கினார்.
சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார், திருமெய்த் தொண்டர் குழந்தை விக்னேஸ்வரன், முருகருசி சிவலிங்கம் சுரேஸ்குமார், உச்சி முருகன் திருக்கோவில் அருட்சுனையர் மருத்துவர் கௌரிபாலன் , சங்கீத ஆசிரியை லலிதாம்பிகை பார்த்திபன், சங்கீத ஆசிரியை உமாமதி யோகநாதன், ஜெனீவா தமிழ்ப்பாடசாலை ஆசிரியை இராஜேஸ்வரி, வள்ளுவன் பாடசாலை அதிபர் பொன்னம்பலம் முருகவேள், சைவமும் தமிழும் போட்டி ஒருங்கிணைப்பாளர் இராஜதுரை வசந்தநாதன், லசத்போம் தமிழ்ப் பெண்கள் அமைப்பு உறுப்பினர் ஜீவா, நிதர்சனம் - உறுப்பினர் சேரலாதன் அமலா ஆகியோர் குழந்தைகளுக்கு வெற்றிக் கிண்ணத்தையும் பெறுபேற்றுச் சான்றிதழ்களையும் வழங்கினர்.
பேர்ன், ஜெனீவா, லுட்சேர்ன், லவுசான், நொய்யென்பூர்க் லசத்போம் ஆகிய வலையங்களில் இருந்து பல நூறு இளந்தமிழ்ச் செல்வங்கள் மேடையில் தோன்றி தமது வெற்றிக் கிண்ணங்களையும், வெற்றிச் சான்றிதழ்களையும் பெற்றுச் சென்றனர்.
நன்றி உரையினை தில்லையம்பலம் சிவகீர்த்தி ஆற்றினார். குழந்தைகளின் உள்ளத்தில் தமிழ் அருட்பாக்களும், நற்றமிழ் அறிவும் நிலைக்கச் செய்வதே இப்போட்டியின் நோக்கம். இதற்கு உதவும் பிள்ளைகள், பெற்றோர், ஆசிரியர்கள், போட்டி நடத்த உதவும் நிலையப் பொறுப்பாளர்கள், ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர்கள், தொண்டர்கள் என அனைவருக்கும் வைநெறிக்கூடம் நன்றி நவில்கின்றது.
போட்டிக் கட்டணத்தில் இருந்து மட்டும் இப்போட்டியினை நடாத்தி முடிக்க முடியாது. சைவநெறிக்கூடம் இப்போட்டியை போட்டியாகப் பார்ப்பது இல்லை. எம் தமிழ்ச் செல்வங்கள் தம்மை வளர்க்க ஊக்கமாகவே சைவநெறிக்கூடமாகிய நாம் இதனை நோக்குகின்றோம்.
சைவமும் தமிழும் போட்டி
“தொடர்ந்தும் நடைபெற உள்ள போட்டிகளிலும் உங்கள் பிள்ளைகளை பங்கெடுக்க ஊக்குவிக்க வேண்டுகின்றோம் - நன்றி நவில்கின்றோம்” என இவரது உரை அமைந்தது.
இந்த ஆண்டிற்கான சைவமும் தமிழும் போட்டி 23. 10. 2022 நடைபெறும் என இம் மேடையில் அறிவிக்கப்பட்டது.