ரேடியோ பேகம் வானொலி சேவையை தடை செய்த தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானில்(Afghanistan) செயற்பட்டு வந்த ஒரே பெண்கள் வானொலி சேவையை, தாலிபான்கள் இடைநிறுத்தியுள்ளானர்.
2021 இல் அந்தக் குழு ஆட்சிக்கு வந்ததிலிருந்து,பொது வாழ்க்கையிலிருந்தும் சமூகத்திலிருந்தும் பெண்கள் ஒதுக்கி வைக்கப்படும் சம்பவத்தை, இந்த நடவடிக்கை ஆழப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காபூலை தளமாகக் கொண்ட ரேடியோ பேகம் என்ற வானொலி சேவை, பெண்களின் கல்வியை நோக்கமாகக் கொண்ட உள்ளடக்கத்துடன் பெண்களால் நடத்தப்படும் சேவையாகும்.
சோதனையிட்ட தாலிபான்
இந்தநிலையில் இன்று வானொலி நிலைய வளாகத்தை சோதனையிட்ட தாலிபான் அதிகாரிகள், கணினிகள், கோப்புகள் மற்றும் தொலைபேசிகளைக் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர் அத்துடன் எந்த பதவியையும் வகிக்காத, வானொலியின் இரண்டு ஆண் ஊழியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒளிபரப்புக் கொள்கை மற்றும் நிலையத்தின் உரிமத்தை முறையற்ற முறையில் பயன்படுத்துதல் போன்ற பல மீறல்களைக் காரணம் காட்டி, இந்த சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், வெளிநாட்டை தளமாகக் கொண்ட தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு நிகழ்ச்சிகளை அங்கீகரிக்கப்படாத முறையில் வழங்கிய குற்றச்சாட்டும், தாலிபானின் ஊடக அமைச்சினால் சுமத்தப்பட்டுள்ளது.
வானொலி மீதான தடை
எனினும், கூறப்பட்ட வெளிநாட்டு தொலைக்காட்சி சேவை எதுவென்பதை, அமைச்சகம் குறிப்பிடவில்லை. இந்தநிலையில், சுயாதீன உரிமைகள் குழுவான ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் போர்டர்ஸ் (RSF) என்ற எல்லைகள் அற்ற செய்தியாளர் அமைப்பு, குறித்த வானொலி மீதான தடையை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு, தாலிபான் நிர்வாகத்திடம் கோரியுள்ளது.
ரேடியோ பேகம் வானொலி, ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள பெண்களுக்கு சுகாதாரம், உளவியல் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளுடன் ஒரு நாளைக்கு ஆறு மணிநேர பாடங்களையும் ஒளிபரப்பி வந்தது.
எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடாமல்", ஆப்கானிய பெண்களுக்கு கல்வி மற்றும் ஆப்கானிய பெண்களுக்கு ஆதரவை வழங்கி வந்ததாக அந்த நிலையம் கூறியுள்ளது. அதன் சகோதர சேவைகள், பிரான்சின் பாரிஸில் இருந்து இணைய சேவைகளை வழங்குகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |