யாழில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்துள்ள சுவிஸ் தமிழ் ஊடக மையம்
யாழ். பிராந்திய ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் தாக்கப்பட்டதை சுவிஸ் தமிழ் ஊடக மையம் வன்மையாக கண்டித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதும், படுகொலைசெய்யப்படுவதுமான சம்பவங்கள் அச்சத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
கடுமையான தண்டனைகள்
மேற்படி ஊடகவியளாலர் வீட்டுக்கு சென்ற தாக்குதல் தாரிகள் வீட்டை தீக்கிரையாக்கியுள்ளதோடு அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியும் மோட்டார் சைக்கிளை உடைத்தும் அவருக்கு பாரிய உயிர் அச்சுறுத்தலை மேற்கொண்டுள்ளார்கள்.
இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடக்காது இருக்க சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதோடு அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என சுவிஸ் தமிழ் ஊடக மையம் கேட்டுக்கொள்கிறது.
ஊடகவியலளர்களின் பாதுகாப்பிற்காக அனைத்துலக மட்டத்தில் "சுவிஸ் தமிழ் ஊடக மையம்" வலுவாக தனது குரலை கொடுக்கும் என்பதையும் இங்கு குறிப்பிடுகிறோம்.
நீண்ட காலமாக ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஜனநாயக விரோத வன்முறை செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் இலங்கையின் ஊடக அமைச்சு முறையான நடவடிக்கைகளை எடுத்து ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உடன் உறுதிப்படுத்த உத்தரவாதம் வழங்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் இலங்கையில் ஊடகவியலாளர்கள், தாக்கப்படுவது, அச்சுறுத்தப்படுவது, படுகொலை செய்யப்படும் மிக மோசமான செயற்பாடுகள், உடன் நிறுத்தப்பட வேண்டும் என்பதை இந்த அறிக்கை மூலம் கேட்டுக்கொள்கிறோம்.
எனவே! அரசாங்கம் இதுபோன்ற சம்பவங்களுக்குப் பின்னர் மௌனமாக இருப்பதை தொடர் கதையாக வைத்திருக்காமல் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்பதைக் கவனத்தில் கொண்டே " சுவிஸ் தமிழ் ஊடக மையம்" குறிப்பிட்ட ஊடகவியலாளர் மீதான தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |